Published : 01 Oct 2022 10:31 AM
Last Updated : 01 Oct 2022 10:31 AM

மீண்டும் சர்ச்சையில் அசோக் கெலாட்: ரகசியக் குறிப்பின் புகைப்படம் வெளியானதால் சிக்கல்

அசோக் கெலாட் | கோப்புப்படம்

புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் "ரகசியக் குறிப்பு" என்று வெளியான புகைப்படம் ஒன்றில் உள்ள "எஸ்பி" என்ற வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள மனோரமா தலைமைப் புகைப்படக் கலைஞர் ஜே.சுரேஷ் எடுத்த அந்தப்படம் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கச் செல்லும் போது எடுத்துச் சென்ற குறிப்புகள் என்று கூறப்படுகிறது.

அந்த குறிப்புகளில், நடந்தவை அனைத்தும் வருத்தம் தரக்கூடியது. நானும் மிதவும் காயம் பட்டுள்ளேன். மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைப் பார்த்து கட்சி மாறும் கலாச்சாரம் ஒன்று உருவாகி வருகிறது. அது அங்கு நடக்கவில்லை. எஸ்.பி. கட்சியிலிருந்து வெளியேறலாம். இது முன்பே நமக்கு தெரிந்திருந்தால் அது கட்சிக்கும் நல்லதாக இருந்திருக்கும். ஆட்சியை தவிழ்க்க தன்னாலான அனைத்தையும் செய்த முதல் மாநிலத் தலைவர் அவர் என்ற குறிப்புகள் இருந்தன.

மேலும், அந்த குறிப்புகளில், தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும், அவருக்கு 18 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. பாஜக 10 முதல் 50 கோடி ரூபாய் வரை கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, சோனியாவுடனான சந்திப்புக்கு முன்னர் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான குறிப்புகளை அசோக் கெலாட் குறித்துவைத்துள்ளார் என்பது அந்த புகைப்படத்தில் இருந்து தெரிகிறது என்று மனோரமா தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வைரலான இந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா,"அசோக் கெலாட்டின் குறிப்புகளில் உள்ள இந்த எஸ்பி யார்? முதலில் காங்கிரஸை இணையுங்கள்... இந்தியா இணைந்துதான் இருக்கிறது ஜி" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை கடந்த வியாழக்கிழமை சந்தித்தார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் ஒரு தலைவர் ஒரு பதவி என்ற கொள்கையின் படி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறப்பட்டது. அவருக்கு அடுத்து அம்மாநில முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட்-ஐ முதல்வராக்க கட்சித் தலைமை முடிவு செய்தது.

இதற்கு எதிப்பு தெரிவித்து அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த விவகாரம் காங்கிரஸில் பெரும் சர்ச்சையையும், அசோக் கெலாட்டின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக சோனியா காந்தியை அசோக் கெலாட் சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர், தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த புகைப்பட விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியும், அசோக் கெலாட்டும் எந்தவித மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x