Published : 01 Oct 2022 05:25 AM
Last Updated : 01 Oct 2022 05:25 AM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக். 17-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறினார். ஆனால், முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு விட்டுக்கொடுக்க மறுத்த விவகாரத்தால், போட்டியில் இருந்து விலகினார்.
திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் ஆகியோர் வேட்பு மனு பெற்றனர். ஆனால், திடீர் திருப்பமாக போட்டியில் இருந்து விலகுவதாக திக் விஜய் சிங் நேற்று காலை அறிவித்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். ஏற்கெனவே அறிவித்தபடி, சசி தரூர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரியிடம் நேற்று வேட்புமனுவை அளித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேற்று மனுதாக்கல் செய்தார். பின்னர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, "சிறுவயது முதல் காங்கிரஸுக்காக உழைத்து வருகிறேன். பெரும்பாலான தலைவர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர். எனவே, நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்றார்.
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.என்.திரிபாதியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “காங்கிரஸ் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அதனடிப்படையில் நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்" என்றார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மேலும், இன்றே வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 8-ம் தேதி கடைசி நாளாகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும் நிலையில், வரும் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.
காங்கிரஸ் நிர்வாகிகள் 9,100 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அந்தந்த மாநிலத் தலைமை அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வரும் 19-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில், கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT