Published : 02 Nov 2016 04:21 PM
Last Updated : 02 Nov 2016 04:21 PM

மதுக்கடைகளை மூடிய பிறகு மக்கள் கருத்து கேட்கும் பிஹார்

மதுவிலக்கு மற்றும் கலால் (2016) புதிய சட்டத்தை அமல்படுத்தி ஒரு மாதத்துக்குப் பிறகு பிஹார் அரசு, பொதுமக்களிடம் தடை குறித்துக் கருத்துக் கேட்டுள்ளது.

இதுகுறித்து பிஹார் அரசு இன்று வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மதுவிலக்குச் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், ஆலோசனைகளை ஈ-மெயில், கடிதம், ஃபேக்ஸ் வாயிலாக பொதுமக்கள் நவம்பர் 12 வரை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிஹார் மாநில மதுவிலக்குச் சட்டத்தின் கடுமையான விதிமுறைகள் குறித்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், வீண் சங்கடங்களைத் தவிர்க்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'கடுமையான மதுவிலக்கு சட்டம்'

மதுவிலக்கு சட்டத்தில் மேலும் பல கடுமையான ஷரத்துகளை இணைத்து, புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பாணையை காந்தி ஜெயந்தி தினமான, 2-ம் தேதி பிஹார் அரசு வெளியிட்டிருந்தது. புதுச்சட்டம் மிகவும் கடுமையாக இருப்பதாகப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டிவந்த நிலையில் பிஹார் அரசு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் படலத்தை துவங்கியுள்ளது.

இதுகுறித்த விளம்பரத்தை அரசின் பதிவு, கலால் வரி மற்றும் மதுவிலக்கு துறை, பிஹாரின் உள்ளூர் நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து 'தி இந்து'வுக்குக் கிடைத்த தகவலின்படி, புதுச்சட்டத்தின் சில விதிமுறைகள் கடும் அடக்குமுறையாகவும், நடைமுறைக்கு ஒத்து வராமலும் இருக்கின்றன. அவை உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், பிஹார் அரசு தப்பித்துக் கொள்ள பொதுமக்களை நாடுகிறது.

மேலும், பிஹார் சட்டமன்ற குளிர்காலத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் வரை நடக்க உள்ளது. இதில், மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுவிலக்கு அமலான பிறகு சுமார் 18,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

''பிஹார் மக்களிடம் கடுமையான மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தி, இப்போது அவர்களிடமே ஆலோசனைகள் கோரும் நிதிஷ், பிஹார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று பாஜக தலைவரும், அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x