Published : 29 Sep 2022 10:58 AM
Last Updated : 29 Sep 2022 10:58 AM

ஆர்எஸ்எஸ்-ஐ தடை செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பாஜக தலைவர்கள் பதில்

லாலு பிரசாத் யாதவ் | கோப்புப்படம்

பாட்னா: "நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று என்னால் பெருமையாகவும் வெளிப்படையாகவும் சொல்ல முடியும். ஆனால் லாலு பிரசாத் யாதவ்-ஆல் அவர் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா என்று பாஜகவைச் சேர்ந்த கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் சிங்,இதே சவாலை காங்கிரஸின் திக்விஜய் சிங்-மிடமும் விடுத்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் விசாரணை அமைப்புகளால் சோதனைக்குள்ளான பிஎஃப்ஐ அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து புதன்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ்," ஆர்எஸ்எஸ் அமைப்பு மிகவும் மோசமானது. அதைத்தான் முதலில் தடை செய்திருக்க வேண்டும். அவர்கள் பிஎஃப்ஐ அமைப்பின் மீது தேவையற்ற பயத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள். இந்து பயங்கரவாதத்தை அதிகமாக பேசும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முதலில் தடை செய்யப்பட வேண்டும் என்று புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிஹார் மாநிலத்தின் பாஜகவைச் சேர்ந்த கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கவேண்டும் என்பவர்கள் ஒரு வித்தியாசத்தை புரிந்து கொள்ளவேண்டும். என்னால் நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று வெளிப்படையாகவும், பெருமையாகவும் சொல்ல முடியும். லாலு பிரசாத் யாதவால் தான் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிஹாரில் அவர்கள் சார்ந்திருக்கிற அரசு தானே ஆட்சியில் உள்ளது. அவர்களுக்கு தைரியம் இருந்தால் அங்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினை தடைசெய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே கேள்வியை மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங்கை பார்த்து எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ், பிஎஃப்ஐ அமைப்பினை ஒப்பிட்டுப் பேசும் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது. நான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று என்னால் பெருமையாக சொல்ல முடியும். திக்விஜய் சிங்கால் அவர் ஒரு பிஎஃப்ஐ உறுப்பினர் என்று சொல்ல முடியுமா. யாராலும் முடியாது. ஜாகிர் நாயக்கை சாந்திகுரு என்றும், துக்கடே துக்கடே என்று கோஷமிடும் ஒரு கட்சியிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறுகையில், " பிஎஃப்ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், அதனை ஆர்எஸ்எஸ் அமைப்போடு ஒப்பிடுபவர்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தற்போதைய சூழலில் பிஎஃப்ஐ மீதான தடை மிகவும் முக்கியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், மனிதநேயம் ஆகியவைகளைக் காப்பாற்றுவதற்காக மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை பாராட்ட வார்த்தைகளே இல்லை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் அறிக்கை ஒன்றில், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்றே வேறுபாடின்றி அனைத்து வகையான பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x