Published : 04 Nov 2016 10:00 AM
Last Updated : 04 Nov 2016 10:00 AM

விசாகப்பட்டினத்தில் ‘பீச் லவ் உற்சவம்’ - 9,300 காதல் ஜோடிகள் பங்கேற்பு- காதலர் தினத்தையொட்டி ஆந்திர அரசு ஏற்பாடு

அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் விசாகப்பட்டினத்தில் ‘பீச் லவ் உற்சவம்’ நடத்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையில், அடுத்தாண்டு பிப்ரவரி 12-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, ‘பீச் லவ் உற்சவம்’ என்ற பெயரில், காதல் வைபோகத்தை நடத்த மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 இடங்களைச் சுற்றுலாத் துறை, மாநகராட்சி உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பிரம்மாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.

உள்ளூர் ஜோடிகள் மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் காதல் ஜோடிகள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

உற்சவத்தில் பங்கேற்கும், 9 ஆயிரம் காதல் ஜோடிகளுக்கும் சோலாரில் இயங்கும் 9 ஆயிரம் தனித்தனி குடில்கள் அமைக்கப்பட உள்ளன.

அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி, இந்திய, மேற்கிந்திய கலாச்சார நடனங்களும் உற்சவத் தில் இடம்பெறும். பிரபல பாப் பாடகி ஷகீரா கலந்துகொண்டு நடனம் ஆட உள்ளார். இந்திய பிரபலங்களான பி.டி.உஷா, பி.வி.சிந்து உட்பட பலரும் உற்சவத்தில் கலந்துகொள் கின்றனர்.

ஹாலிவுட், பாலிவுட், மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்விழாவினை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் மும்முரமாக தொடங்கிவிட்டனர்.

ஆந்திராவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த காதலர் தினத்தை ஒரு வாய்ப்பாக முதல்வர் சந்திர பாபு நாயுடு பயன் படுத்துகிறார். இதற்கு எதிர்க்கட்சி கள், மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x