Published : 28 Sep 2022 05:23 AM
Last Updated : 28 Sep 2022 05:23 AM
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் நிறுவனத்தில் ரூ.208 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ), எச்.ஏ.எல். நிறுவனத்தில் கிரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையத்தை அமைத்து கொடுப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடந்த 2013-ம் ஆண்டு செய்திருந்தது. இதையடுத்து பெங்களூரு எச்.ஏ.எல் நிறுவனத்தில் 4,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.208 கோடி செலவில் ராக்கெட் இன்ஜின் உற்பத்தி மையம் அமைக்கப்பட் டுள்ளது.
இந்த மையத்தின் தொடக்க விழா குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோருடன் பங்கேற்ற குடியரசுத் தலைவர் இந்த மையத்தை திறந்து வைத்தார். கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில், இந்தியா தற்சார்பு நிலையை அடைய இஸ்ரோ மற்றும் எச்.ஏ.எல் நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சியை அவர் பாராட்டினார்.
இதுகுறித்து இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி கூறியதாவது: இந்த மையத்தில் நாம் விண்ணில் செலுத்திவரும் ராக்கெட்டுகளுக்கு தேவையான கிரையோ ஜெனிக், செமி கிரையோஜெனிக் இன்ஜின்களை தயாரிக்க 70 உயர்நுட்ப இயந்திரங்கள், சோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளில் மட்டுமே கிரையோஜெனிக் இன்ஜின்களை தயாரிக்கும் மையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது இந்தியாவில் அதிவேக ராக்கெட் இன்ஜின்கள் தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளதால், நாடு தற்சார்பு நிலையை நோக்கி முன்னேறும். இதன்மூலம் கிரையோஜெனிக் இன்ஜினை தயாரிக்கும் 6-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளில் கிரையோஜெனிக் இன்ஜின்களுடன் கூடிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை தயாரிக்க ரூ.860 கோடி ஒப்பந்தத்தை எச்.ஏ.எல். மற்றும் எல்.அன்ட்.டி ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT