Published : 28 Sep 2022 04:34 AM
Last Updated : 28 Sep 2022 04:34 AM
போபால்: இந்து பெண்களை, சிறுபான்மையின இளைஞர்கள் காதலித்து, அவர்களை திருமணத்தின்போது மதம் மாற்றுவதாக வலதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்து பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்குர் கடந்த 8-ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க நவராத்திரி விழாக்களில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், அடையாள அட்டைகளை பரிசோதித்தபின் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது’’ என்றார்.
இதையடுத்து மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று நிருபர்களிடம் கூறும்போது, "துர்கையை வழிபடும் பண்டிகையான நவராத்திரி விழா நமது நம்பிக்கையின் மையம். இதுபோன்ற விழாக்களில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும். கர்பா நடன நிகழ்ச்சிகளின்போது, அடையாள அட்டைகளை பரிசோதித்து பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச அரசு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘நவராத்திரி விழாக்களில், கடவுளை பிரார்த்தனை செய்வதற்காக அனைவரும் வரலாம். இதுபோன்ற தருணங்களில், விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது. அதனால் பார்வையாளர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT