Published : 27 Sep 2022 03:07 PM
Last Updated : 27 Sep 2022 03:07 PM

ராஜஸ்தான் காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் | சச்சின் பைலட்டுக்கு தூதுவிடும் பாஜக

சத்தீஷ் பூனியா | கோப்புப் படம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் நீடித்து வரும் சுழலில், அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு பாஜகவின் கதவுகள் திறந்திருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கட்சித் தலைவராகும் பட்சத்தில், சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டது. இதற்கு அஷோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். சச்சின் பைலட் முதல்வராக அறிவிக்கப்பட்டால் தாங்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்வோம் என அவர்கள் எச்சரித்தனர்.

எம்.எல்.ஏக்களின் இந்த அச்சுறுத்தலின் பின்னணியில் அஷோக் கெலாட் இருப்பதாகக் கருதிய காங்கிரஸ் மேலிடம், அவர் மீது கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது. எனினும், இதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஜெய்ப்பூரில் தன்னை நேற்று சந்தித்த கட்சி மேலிட பிரதிநிதிகளான மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மாக்கன் ஆகியோரிடம் அஷோக் கெலாட் கூறி இருக்கிறார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களின் செயலுக்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஷோக் கெலாட்டுக்குப் பதில் முன்னாள் மத்திய அமைச்சர் கமல் நாத்தை கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைக்க காங்கிரஸ் மேலிடம் முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த கமல் நாத், காங்கிரஸ் தலைவராக தனக்கு விருப்பம் இல்லை என்றும், நவராத்திரி வாழ்த்து தெரிவிக்கவே சோனியா காந்தியை சந்தித்ததாகவும் கூறி உள்ளார்.

இந்நிலையில், காந்தி குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமானவர் என்பதால், அஷோக் கெலாட் தலைவர் பதவிக்குப் போட்டியிட கட்சி மேலிடம் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், அவர் நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட உள்ள சசி தரூர், வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, சசி தரூர், பவன் குமார் பன்சால் ஆகிய இருவர் வேட்புமனு படிவத்தை வாங்கிச் சென்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான பொறுப்பாளர் மதுசூதன் மிஸ்த்ரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் வேட்பாளர் குறித்த சர்ச்சை ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது. அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் சத்தீஷ் பூனியாவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோரும் சபாநாயகர் சி.பி. ஜோஷியைச் சந்தித்து வலியுறுத்தி உள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஷ் பூனியா, சச்சின் பைலட் பாஜகவில் இணைய விரும்பினால், அவருக்கு கட்சியின் கதவுகள் திறந்தே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை, அஷோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்குப் பதில் வேறு ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் சச்சின் பைலட் பாஜகவுக்குச் செல்லக்கூடும் என கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே, அவருக்கு சத்தீஷ் பூனியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x