Published : 27 Sep 2022 04:00 AM
Last Updated : 27 Sep 2022 04:00 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கெலாட் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், குழப்பத்துக்கு காரணமான அவரை கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசி தரூர் எம்.பி. உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தலைவராக தேர்வானாலும், முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சித் தலைவராக கெலாட் தேர்வானால், அவருக்கு பதில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள கெலாட் இல்லத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கெலாட், சச்சின் பைலட் மற்றும் மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க வந்தனர். சில எம்எல்ஏக்கள் மட்டுமே வந்த நிலையில், கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் யாரும் வரவில்லை. இதனால், கூட்டம் நடக்கவில்லை.
அதேநேரத்தில், 16 அமைச்சர்கள் உட்பட கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேரும் அமைச்சர் சாந்தி தரிவால் வீட்டில் கூடியிருந்தனர். கடந்த 2020-ல் அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர், நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்ட 82 எம்எல்ஏக்களும் கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டம் நடைபெற இருந்த இடத்துக்கு செல்லாமல், சட்டப்பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷியின் இல்லத்துக்கு சென்றனர். சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ராஜினாமா கடிதத்தை ஜோஷியிடம் அளித்தனர்.
இதனால், அதிருப்தி அடைந்த மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் இருவரும் நேற்று டெல்லி திரும்பினர். டெல்லி புறப்படும் முன்பு, செய்தியாளர்களிடம் அஜய் மக்கான் கூறியதாவது:
கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு வராமல், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியது ஒழுக்கக்கேடான செயல். அவர்களில் 3 பேர் மட்டும் எங்களை சந்தித்து, தங்கள் அணியை சேர்ந்த ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், முதல்வரை தேர்ந்தெடுக்க, கட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவும் அக்டோபர் 19-ம் தேதிக்கு (புதிய தலைவர் பொறுப்பேற்கும் நாள்) பிறகுதான் இது பொருந்தும் என தீர்மானத்தில் குறிப்பிட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் அறிக்கை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே டெல்லி புறப்படும் முன்பு, அசோக் கெலாட் நேற்று அவரை சந்தித்தார். அப்போது, எம்எல்ஏக்களின் நடவடிக்கையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவதாகவும் கெலாட் தெரிவித்துள்ளார்.
கெலாட்டை தலைவராக்க எதிர்ப்பு
ராஜஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் அசோக் கெலாட் மீது செயற்குழு உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட அவரை அனுமதிக்க கூடாது என சோனியா காந்தியிடம் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தலைவர் பதவிக்கு போட்டியிட கெலாட்டை அனுமதிக்கலாமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரில் ஒருவரை தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறக்குவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT