Last Updated : 28 Jul, 2014 07:52 AM

 

Published : 28 Jul 2014 07:52 AM
Last Updated : 28 Jul 2014 07:52 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு சட்டத்தில் மாற்றம் - மத்திய அரசு பரிசீலனை

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

வரதட்சணை தடுப்புச் சட்டம், 2009-ன் கீழ் பெண்கள் புகார் அளித்தால் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “நாட்டில் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவாக வரதட்சணை தடுப்புச் சட்டம் உள்ளது. இப்பிரிவை பெண்கள் தங்கள் கணவர் மற்றும் கணவர் வீட்டினரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்” என்று கூறியிருந்தது.

மேலும், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (ஏ)-ன் கீழ் பெண்கள் வரதட்சணை புகார் அளித்தால் போலீசார் தன்னிச்சையாக கைது நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. புகாரின் தன்மையை ஆய்வு செய்து, கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஜிஸ்திரேட்களும் கைதுக்கான முகாந்திரம் உள்ளதா என்பதை எழுத்து மூலம் பதிவு செய்த பிறகு காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து தேசிய பெண்கள் நல கமிஷனும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து மாதிரி சட்டம் ஒன்றை அந்த அமைச்சகம் தயாரித்து அனுப்பி வைக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்து, விசாரணையில் அது தவறானது என்று தெரிய வந்தால் புகார் அளித்தவருக்கு அபராதம் மற்றும் குறைந்தபட்ச தண்டனை வழங்குவது குறித்தும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.

மேலும், வரதட்சணை புகார் விஷயத்தில் திருமணத்தின்போது அளிக்கப்படும் புகார், திருமணம் தொடர்பாக அளிக்கப்படும் புகார், திருமணத்துக்குப் பின்பு அளிக்கப்படும் புகார் என்று மூன்று கட்டங்களாக பிரித்து, அதற்கேற்ப விசாரணை விவரங்களை உள்ளடக்கி மாதிரி சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x