Published : 26 Sep 2022 06:47 PM
Last Updated : 26 Sep 2022 06:47 PM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் வெளியேறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் 30-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கிறது. போட்டி இருக்கும்பட்சத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி வாக்குப்பதிவு இருக்கும் என்றும், அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட்டும், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
உதய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்தபடி, ஒருவருக்கு ஒரு பதவி எனும் கொள்கை கடைப்பிடிக்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்ததை அடுத்து, அஷோக் கெலாட் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்பட்டது. அவருக்கு பதில் சச்சின் பைலட் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் என்றும் காங்கிரஸ் தலைமை இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக அஷோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 92 பேர், அஷோக் கெலாட் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகும் முதல்வராக நீடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிமானா செய்வோம் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதன் பின்னணியில் அஷோக் கெலாட் இருப்பதாக காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதனால், காங்கிரஸ் தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய் மாக்கன், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர், அஷோக் கெலாட்டை சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனிடையே, அஷோக் கெலாட்டுக்குப் பதில் கட்சி மேலிடத்திற்கு நம்பிக்கை உள்ள வேறு ஒருவரை தலைவர் பதவிக்குப் போட்டியிட அனுமதிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அமைப்பான காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் சிலர், சோனியா காந்தியை வலியுறுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அஷோக் கெலாட் போட்டியிடுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தச் சூழலில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் 30-ம் தேதி மனு தாக்கல் செய்ய இருப்பதாக சசி தரூர் தெரிவித்துள்ளார். கட்சியில் சீர்திருத்தத்தை வலியுறுத்திய ஜி 23 தலைவர்களில் ஒருவரான இவருக்கு, சொந்த மாநிலமான கேரளாவிலும்கூட எதிர்ப்பு இருக்கிறது. எனினும், மிகுந்த நம்பிக்கையோடு இருக்கும் சசி தரூர், வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தனக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT