Published : 26 Sep 2022 02:55 PM
Last Updated : 26 Sep 2022 02:55 PM

சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை டெல்லி அழைத்துச் சென்று  மதிய உணவளித்த அரவிந்த் கேஜ்ரிவால்  

டெல்லி வந்த குஜராத் தூய்மை பணியாளர் ஹர்ஷ் மற்றும் குடும்பத்தினர்

புதுடெல்லி: தன்னை வீட்டிற்கு சாப்பிட அழைத்த தூய்மைப் பணியாளரை குடும்பத்துடன் தன்னுடைய டெல்லி வீட்டிற்கு அழைத்து மதிய விருந்தளித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், "ஹர்ஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நல்வரவு. என்னுடைய குடும்பம் அவர்களின் வருகைக்காக காத்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.டெல்லி, பஞ்சாப் வெற்றியை அடுத்து குஜராத் மீது கவனம் செல்லுத்தி வரும் அரவிந்த் கேஜ்ரிவால் அங்கு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் ஞாயிற்றுக்கிழமை தூய்மை பணியாளர்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துரையாடினார்.அப்போது, ஹர்ஷ் சோலான்கி என்ற தூய்மைப் பணியாளர் டெல்லி முதல்வரை தனது வீட்டிற்கு உணவு சாப்பிட வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். டெல்லி முதல்வரிடம் பேசிய ஹர்ஷ்," 15 நாட்களுக்கு முன்பு நீங்கள் குஜராத் வந்த போது ஆட்டோ டிரைவர் ஒருவரின் வீட்டிற்கு சாப்பிட சென்றீர்கள். அதேபோல வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த எங்களின் வீட்டிற்கும் சாப்பிட வரவேண்டும்" என்று அழைப்பு விடுத்தார்.

இதற்கு பதில் அளித்த அரவிந்த் கேஜ்ரிவால் அந்த நபரின் பெயரை கேட்டார். தொடர்ந்து, "நிச்சயமாக நான் உங்களின் வீட்டிற்கு உணவு சாப்பிட வருவேன். அதற்கு முன்பாக நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதற்கு நீங்கள் சம்மதித்தால் நான் உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன்.

தேர்தல் நெருங்கும் போது எல்லாம், தலைவர்கள் தலித்துகளின் வீடுகளுக்குச் சென்று உணவு சாப்பிடும் வழக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். இதுவரை எந்த தலைவரும் அவர்களை தங்களது வீட்டிற்கு சாப்பிட அழைத்ததில்லை. நீங்கள் என்னுடைய வீட்டிற்கு இரவு சாப்பாட்டிற்கு வர முடியுமா?" என்றார்.

டெல்லி முதல்வரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஹர்ஷிடம், "நாளை நான் உங்கள் குடும்பத்திற்கு விமான டிக்கெட் அனுப்புகிறேன். நீங்கள் டெல்லிக்கு வாருங்கள். நாளை என்னுடைய மொத்த குடும்பமும் உங்கள் குடும்பத்துடன் உணவு சாப்பிடும். அதன் பின்னர் நான் அடுத்த முறை அகமதாபாத் வரும்போது உங்கள் வீட்டிற்கு சாப்பிட வருகிறேன்" என்றார்.

இதன்படி, விமானம் மூலம் டெல்லி சென்ற ஹர்ஷ் குடும்பத்தினர் காலை 10 மணிக்கு டெல்லி சென்றனர். அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.ராகவ் சந்தா சென்று வரவேற்றார். ஹர்ஷ் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள பஞ்சாப் பவனில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்கள் மதியம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு மாலை 6.30 மணிக்கு குஜராத் திரும்புகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x