Published : 26 Sep 2022 11:08 AM
Last Updated : 26 Sep 2022 11:08 AM

இந்தியா குறித்து பாரபட்சமான பதிவு: அமெரிக்க ஊடகங்களை விமர்சித்த அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் | கோப்புப்படம்

வாஷிங்டன்: இந்தியா குறித்து பாரபட்சமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுசபையின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார். அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் அமைச்சர் உரையாற்றினார்.

அப்போது, அமெரிக்காவில் இந்தியாவிற்கு எதிரான கருத்துடையவர்கள் அதிகரித்துவருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், " இங்குள்ள ஊடகங்களை நான் பார்க்கிறேன். அவர்களில் சிலர் இந்த நகரத்தில் இருந்து கொண்டு என்ன எழுதுகிறார்கள் என்று உங்களுக்கும் தெரியும். என்னுடைய கருத்து என்னவென்றால் பாரபட்சம் இருக்கிறது. அதேநேரத்தில் அதனைத் தீர்ப்பதற்கான உண்மையான முயற்சிகளும் நடைபெறுகின்றது. இந்தியாவின் பாதுகாவலர்கள், இந்தியாவை உருவாக்குபவர்கள் தாங்கள் தான் என்று நம்புகிறவர்கள், இந்தியாவில் மதிப்பினை இழந்திருக்கிறார்கள். அதனால் இதுபோன்ற விவாதங்களை இந்தியாவிற்கு வெளியை உருவாக்குகிறார்கள்.

இப்படிபட்டவர்களால் ஒருபோதும் இந்தியாவில் வெற்றி பெற முடியாது. அதனால் அவர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து இந்தியாவை தீர்மானிக்க முயல்கிறார்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். இதுகுறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இங்குள்ள அமெரிக்கர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது, அங்குள்ள சிக்கல் என்ன என்பது குறித்து தெரியாது என்பதற்காக மட்டும் நான் இதனைச் சொல்லவில்லை. நாம் ஒதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காகவும், நம்மைப் பற்றி மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அதனால் இதனை நாம் முக்கியானதாக எடுத்துக் கொள்ளவேண்டும்" என்றார்.

மேலும் நியூயார்க்கில் காஷ்மீர் விவகாரம் குறித்த தவறான கருத்துகள் பரப்பப்படுவது குறித்து பேசிய அமைச்சர், " கொல்லப்பட்டவர்கள் எந்த மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பது ஒரு போதும் முக்கியம் இல்லை. அங்கு இந்திய ராணுவ வீரர்கள், இந்திய காவல்துறையினர் கடத்தப்படுகின்றனர். அரசாங்க வேலையில் இருப்பவர்கள், வேலைக்காக வெளியே செல்பவர்கள் கொல்லப்படுகின்றனர்.

இவைகள் குறித்து நீங்கள் எத்தனை முறை கேள்விப்பட்டிருப்பீர்கள், எத்தனை முறை இவைகள் பற்றி பேசியிருப்பீர்கள். ஊடகங்கள் எதனைப் பேசுகின்றன. எதனைப் பேசவில்லை என்பது மிகவும் முக்கியம். இப்படித்தான் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு வடிவம் பெறுகிறது. அங்கு இணையச்சேவை துண்டிக்கப்பட்டது குறித்து பெரிய சலசலப்பு உண்டாகியிருக்கிறது. இப்போது மனித உயிர்கள் பறிபோவதைவிட இணைய சேவை துண்டிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான பிரச்சினை என்று நீங்கள் பேசுகிறீர்கள். நான் என்ன செய்யமுடியும் ?

பிரிவு 370 விவகாரத்தை எடுத்துக் கொண்டால், இந்திய அரசியல் அமைப்பு வழங்கியிருந்த ஒரு தற்காலிக வசதி, இப்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இது பெரும்பான்மை மக்களின் செயல். அது பெரும்பான்மையானதாக இருக்க வேண்டும். உண்மையில் காஷ்மீரில் நடப்பது பெரும்பான்மை மக்களின் விருப்பமா என்பதைச் சொல்லுங்கள். உண்மை அங்கே திரிக்கப்பட்டுள்ளது. எது சரி எது தவறு என்பதில் குழப்பம் உள்ளது.

இதை நாம் இப்படியே விட்டுவிடக் கூடாது. நாம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். உண்மையை எடுத்துக் கூற வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது கருத்துகளை வெளியே தெரிவிக்க வேண்டும். இதைத் தான் நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். இதிலிருந்து நாம் ஒதுங்கி இருந்தோம் என்றால், நாம் நமது நாட்டிற்கு சேவை செய்யாதவர்களா இருப்போம். நமது நம்பிக்கைகளை கருத்துக்களை மக்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும். சரி, தவறு பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறவேண்டும்." இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x