Published : 26 Sep 2022 05:19 AM
Last Updated : 26 Sep 2022 05:19 AM
புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார்.
அப்போது, “பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும். மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கும் நோயாளி, இனி காகித ஆவணங்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
அவரது அறிவிப்பின்படி, முதல்கட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தேசிய அளவில் `ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்' என்ற பெயரில் தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் 4 ஆண்டுகள் நிறைவு மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில், பயனாளிகளுக்கு அட்டைகள் வழங்கப்படுகின்றன. தொடக்ககாலத்தில் தினமும் 1.50 லட்சம்பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது தினமும் 4 லட்சம் அட்டைகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அடுத்தகட்டமாக தினமும்10 லட்சம் அட்டைகளை வழங்கஇலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 19 கோடி பேருக்குமருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சுகாதாரத் துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு மாவட்டத்துக்கு ரூ.100 கோடி செலவிடப்படும்.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம். இதற்காக மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 14 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம், இலவசமாக டிஜிட்டல் அட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நாடு முழுவதும் 28,300 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 46 சதவீதம் தனியார் மருத்துவமனைகள்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT