Published : 26 Sep 2022 08:48 AM
Last Updated : 26 Sep 2022 08:48 AM

உத்தராகண்டில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் தகனம்

இளம்பெண் கொலையை கண்டித்து உத்தராகண்ட் நகர் பகுதியில் உறவினர்கள், பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது. படம்: பிடிஐ

டேராடூன்: இளம்பெண் கொலையை கண்டித்து உத்தராகண்டின் ஸ்ரீநகர் பகுதியில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதனால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது. கொலையான இளம்பெண்ணின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா ரிஷிகேஷில் விடுதி நடத்தி வந்தார். அங்கு வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரியை (19) கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை.

போலீஸ் விசாரணையில் விடுதியின் உரிமையாளர் புல்கிட் ஆர்யா மற்றும் விடுதி ஊழியர்கள் சேர்ந்து அங்கிதாவை கொலை செய்திருப்பது கடந்த 23-ம் தேதி தெரியவந்தது. ரிஷிகேஷில் உள்ள கால்வாயில் இருந்து அவரது உடல் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக புல்கிட் ஆர்யா, விடுதி மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தா கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸார் கூறும் போது, "விடுதியில் வரவேற்பாளராக பணியாற்றிய அங்கிதா பண்டாரியை பாலியல் தொழிலில் தள்ள புல்கிட் ஆர்யாவும் ஊழியர்களும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை கொடூரமாக கொலை செய்து உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

அங்கிதா பண்டாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்தது. அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதும், உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

அவரது உடல் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை தகனம் செய்ய மறுத்து உறவினர்கள் ஸ்ரீநகரில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தியதால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் சாலையில் போக்குவரத்து முடங்கியது.

கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் உறுதி அளித்ததன் பேரில் அங்கிதாவின் உடலை தகனம் செய்ய உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து என்ஐடி படித்துறையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கு காரணமாக முன்னாள் அமைச்சர் வினோத்ஆர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முக்கிய பதவிகளில் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x