Published : 24 Sep 2022 04:08 AM
Last Updated : 24 Sep 2022 04:08 AM
புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வுசெய்து தீவிரவாத அமைப்புக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பு அனுப்புகிறது என்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலவரங்கள், தாக்குதல்கள், கொலை வழக்குகளில் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தொடர்பிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் இந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி சென்றபோது, அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக பாட்னாவில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பாட்னாவில் ஆயுதப் பயிற்சி அளித்ததும் இந்த விசாரணையில் தெரியவந்தது.
மேலும், நடப்பாண்டு தொடக்கத்தில் கேரளாவின் மூணாறைச் சேர்ந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் அப்துல் ரசாக், அஷ்ரப் ஆகியோர் ரூ.22 கோடி மோசடி செய்ததை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது. இதுகுறித்த விசாரணையில், வெளிநாடுகளைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து பிஎஃப்ஐ அமைப்புக்கு நிதியுதவி கிடைப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறையினர் உத்தரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி, அசாம், மகாராஷ்டிரா, பிஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர்,கோவா ஆகிய 15 மாநிலங்களில்உள்ள பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். ஏறத்தாழ 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்களது செல்போன்கள், லேப்டாப் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. வங்கிக் கணக்குகள், ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டன.
இந்த சோதனையின்போது, தமிழகத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, முகமது யூசுப், இஸ்மாயில் உள்ளிட்ட 45 பேரைக் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையின்போது கைதுசெய்யப்பட்ட பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 120 மற்றும் 153-ஏ பிரிவுகள், 1967-ம் ஆண்டு சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் 17, 18, 18பி, 20, 22பி, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. தேசியப் புலனாய்வு முகமையின் டெல்லி கிளை அதிகாரிகள், இந்த வழக்கை பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
மூளைச்சலவை செய்து...
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பிறருடன் சேர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வு செய்ததாகவும், அவர்களை மூளைச்சலவை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில், தீவிரவாதத் தாக்குதல்களுக்காக பிஎஃப்ஐ தலைவர்களும், உறுப்பினர்களும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக இந்தியாவிலும், வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் பணம் திரட்டினர் என்றும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
உள்துறை அமைச்சத்தின் உத்தரவின்பேரில், கடந்த ஏப்ரல்13-ம் தேதி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ தனது மனுவில் மேற்கோள்காட்டியுள்ளது.
அச்சம் ஏற்படுத்தும் நோக்கம்
அதில், “குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள், தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆயுதங்களைப் பயன்படுத்தி, தீவிரவாதச் செயல்களுக்கு துணைபுரிந்துள்ளனர். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வு செய்வதிலும், அவர்களை மூளைச்சலவை செய்வதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டதாக என்ஐஏ தனது மனுவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் கையை வெட்டியது, பிறமதங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களைக் கொன்று குவிப்பது, முக்கியப் பிரமுகர்கள் மற்றும் முக்கிய இடங்களைக் குறிவைத்து தாக்குவது, அதற்காக வெடி பொருட்களைச் சேகரிப்பது, பொதுசொத்துகளை அழிப்பது ஆகிவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பிஎஃப்ஐ அச்சத்தை ஏற்படுத்தியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிஎஃப்ஐ நிர்வாகிகளில் ஒருவரான யாசிர் அராபத் என்ற யாசிர் ஹாசன், இளைஞர்களுக்கு தீவிரவாதப் பயிற்சி அளித்தாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற இணையதளங்கள் மூலம் பல்வேறு பிரிவுமக்களிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விரோதத்தை ஊக்குவித்தனர் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
கேரளாவில் பிஎஃப்ஐ-க்கு மக்கள் எதிர்ப்பு
திருவனந்தபுரம்: என்ஐஏ அதிகாரிகளின் சோதனையைக் கண்டித்து பிஎஃப்ஐ சார்பில் கேரளாவில் நேற்று முழுஅடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிஎஃப்ஐ அமைப்பு வலுவாக இருக்கும் கண்ணூர் நகரில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன.
அந்தக் கடைகளை அடைக்க வலியுறுத்தி பிஎஃப்ஐ தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள், அவர்களை அடித்து விரட்டினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பிஎஃப்ஐ முழுஅடைப்புப் போராட்டம் குறித்து காவல் துறை வட்டாரங்கள் கூறும்போது, “கேரளா முழுவதும் வன்முறையில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 70 பேருந்துகள் சேதமடைந்துள்ளன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT