Published : 24 Sep 2022 01:57 AM
Last Updated : 24 Sep 2022 01:57 AM
கேரளா: கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை வென்றார் திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர். குலுக்கலுக்கு முதல்நாள் மாலையே அந்த லாட்டரியை அனூப் வாங்கியிருந்த நிலையில் அதிர்ஷடம் அவரைத் தேடிவந்தது.
தனது மகன் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். இப்போது லாட்டரி பரிசு கிடைக்க, லோனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்தையும் கைவிட்டுளளார்.
25 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கும் அனூப்புக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிகிதம் வரி போக 15.75 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பணம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் அனூப் இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால், நேற்று தான் சந்தோசத்தில் இல்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், "லாட்டரி பரிசு கிடைத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. ஆனால், இப்போது எனது மகிழ்ச்சி அனைத்தும் போய்விட்டது. காரணம் வெளியே எந்த இடத்துக்கும் என்னால் போக முடியவில்லை. உதவிகேட்டு நிறையபேர் வருகிறார்கள். என் கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். கொஞ்சமாவது பணம் கொடு என்கிறார்கள். அதனால் தான் எனது வீட்டில் என்னால் இருக்க முடியாமல் தலைமறைவாக உள்ளேன்.
நான் எங்குச் சென்றாலும், என்னத் தேடி வருகிறார்கள். இதனால் குழந்தையை பார்க்க முடியாமல், தலைமறைவாக உள்ளேன். எனக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளது. ஆனால், பணம் இன்னும் வந்துசேரவில்லை என்ற நிலையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கிடைக்காமல் போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT