Published : 23 Sep 2022 03:26 AM
Last Updated : 23 Sep 2022 03:26 AM

‘ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது’ - மோகன் பாகவத் முஸ்லிம் தலைவரை சந்தித்த பின்னணியும் பேசியவையும்

டெல்லி: வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம், முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்து மற்றும் கர்நாடகாவில் ஹிஜாப் பற்றிய சர்ச்சை என இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தில் அமைதியின்மை நிலவிவந்த நிலையில், அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சில வாரங்கள் முன்பு தான் "ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேடிச் செல்ல வேண்டாம்" என்று மோகன் பாகவத் பேசியிருந்தார். இதன் தொடர்ச்சியாக சந்திப்பு நடத்தியிருப்பது முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த உமர் அகமது இலியாசி, "எங்களது அழைப்பை ஏற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை. நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாஜ்வீதுல் குரான் மதரசாவை அவர் பார்வையிட்டார். அங்கு கல்வி பயிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நமது மரபணு ஒன்றுதான் என்றும், கடவுளை வழிபடும் முறைதான் வேறானது என்றும் மோகன் பாகவத் கூறினார்" எனத் தெரிவித்தார்.

சந்திப்பின் பின்னணி?

அகில இந்திய இமாம் அமைப்பு, இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பாக அகில இந்திய இமாம் அமைப்பு கருதப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவரான உமர் அகமது இலியாசி. இவர், ஒரு மசூதிக்குள் வசிக்கிறார். அவரது வீடும் மசூதியும் ஒன்றுதான். அதில் ஒரு மதரஸாவையும் நடத்தி வருகிறார். இதை பார்வையிட, இமாம் இல்யாசி மோகன் பாகவத்தை அழைப்பு விடுத்திருந்தார்.

"நீங்கள் மதரஸாவிற்குச் சென்று பாருங்கள். இப்போதெல்லாம் மதரஸாக்கள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நீங்களே பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்" என்று இமாம் இல்யாசி அழைப்பு விடுதத்தன் பேரில், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சந்திப்பு திட்டமிடப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மேலும், இந்த சந்திப்பு நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையுடன் தொடர்பில்லாதது என்றும் ஆர்எஸ்எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், "இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று பேசினார்.

தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், "மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது" என்று பாகவத் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x