Published : 22 Sep 2022 07:36 PM
Last Updated : 22 Sep 2022 07:36 PM
புதுடெல்லி: இதுவரை நடந்த தீவிரவாத தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் இதுபோல மெகா சோதனை நடந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு, நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு உதவுதல், நிதியுதவி அளித்தாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மெகா சோதனையில், தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயங்கங்களில் இணையும் படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள், வசிக்கும் பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகவும், பிஎஃப்ஐ-யின் தேசிய, மாநில, மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகமான கைது நடவடிக்கை கேரளாவில்தான் நடந்துள்ளது. அங்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
இந்தச் சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நடவடிக்கை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலர், தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சோதனை குறித்து கருத்து தெரிவித்திருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, ‘எதிர்ப்பாளர்களின் குரலை நசுக்க அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகின்றது’ என குற்றம்சாட்டியிருந்தது. அந்த அமைப்பின் தலைவரான ஓஎம்ஏ சலாம், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். கேரளா மாநிலம் மலப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு: தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திண்டுக்கல், கடலூர், கோவை, ராமநாதபுரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலத் தலைமை அலுவலத்தில் சோதனை நடைபெற்றது. கோவையில் பிஎஃப்ஐ நிர்வாகி இஸ்மாயிலின் வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது. அதேபோல், கடலூரில் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொளக்குடி கிராமத்தில் வசித்து வந்த பிஎஃப்ஐ-ன் மாவட்டத் தலைவர் பையாஸ் அகமது வீட்டில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற தகவல் அறிந்த அவர் சார்ந்த அமைப்பினர், உறவினர்கள் சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
போராட்டம்: இந்தச் சோதனை, கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தின் திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்கள் கூடி திண்டுக்கல் அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் மாநில தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் மறியல் போராட்டம் நடந்தது.
கேரளாவின் கன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பிஎஃப்ஐ உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவின் மங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஃப்ஐ, எஸ்டிபிஐயை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் தங்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு எதிராக, எஸ்டிபிஐயினர் கோ பேக் என்ஐஏ என்று கோஷமிட்டனர். இன்று நடந்த சோதனை பெரும்பாலும் தென்மாநிலங்களிலேயே அதிகமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT