Published : 22 Sep 2022 03:20 PM
Last Updated : 22 Sep 2022 03:20 PM

சமூக நல்லிணக்க முன்னெடுப்பு: முஸ்லிம் தலைவரை மசூதிக்குச் சென்று சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர்

டெல்லியில் உள்ள மசூதியில் இமாம் அமைப்பின் தலைவரை சந்தித்த மோகன் பாகவத்

புதுடெல்லி: சமீபகாலமாக முஸ்லிம் தலைவர்களைத் சந்தித்து வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வியாழக்கிழமை மசூதி ஒன்றுக்கு சென்று இஸ்லாமியத் தலைவரை சந்தித்து பேசினார்.

அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அகமது இல்யாசியை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறும்போது, “தேசிய தலைநகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நடந்த சந்திப்பு, நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் முயற்சியின் ஒரு பகுதியாக நடந்தது” என்று தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இமாம் அகமதுவின் இல்யாசியின் மகன் சுகைப் இல்யாசி, "நாட்டிற்கு நல்ல செய்தி ஒன்றினை தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல பேசிக்கொண்டோம். எங்கள் அழைப்பை ஏற்று அவர்கள் வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது" என்றார்.

முன்னதாக, சமீபத்தில் முன்னாள் தலைமை தேர்தல் அலுவலர் எஸ்ஒய் குரேஷி, புதுடெல்லியின் முன்னாள் லெப்டினட் ஜெனரல் நஜீப் ஜங் உள்ளிட்ட பிரபலமான ஐந்து இஸ்லாமியத் தலைவர்கள், அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்திருந்தனர். பிற மதத்தைச் சேர்ந்த பிரதிநிகளுடன் சந்திப்பு நிகழ்த்த வேண்டும் என்று அப்போது பேசப்பட்டது. கவலை தரக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதை இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த அந்தக் கூட்டம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், “இஸ்லாமியர்களை பாகிஸ்தானியர்கள், தீவிரவாதிகள் என்று அழைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை கஃபிர் அல்லது நம்பிக்கையில்லாதவர்கள் என்று குறிப்பிடுவதை இந்துக்கள் எதிர்ப்பதை ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சுட்டிகாட்டினர்” என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் கூறுகையில், “நாட்டில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவும், அதற்கு தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இல்லாமல், சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இது வழிவகை செய்யும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x