Published : 22 Sep 2022 05:35 AM
Last Updated : 22 Sep 2022 05:35 AM
புதுடெல்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து மத்திய அரசு சாலை பாதுகாப்பு விதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
கார்களில் பின் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கும் அலாரம் பொருத்துவதை மத்திய அரசு கட்டாயமாக்க உள்ளது. இதுதொடர்பாக வரைவு விதிகளை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்கலாம்
இந்த விதிகள் குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கார்களில் முன் இருக்கையில் மட்டுமல்ல, பின் இருக்கையில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதியாக உள்ளது. ஆனால் பெரும்பாலானோர், முன் இருக்கையில் இருப்பவர்களுக்குத்தான் சீட் பெல்ட் கட்டாயம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் முன் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கு மட்டுமே அலாரம் பொருத்துகின்றன. முன் இருக்கையில் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இந்த அலாரம் ஒலிக்கும். இந்நிலையில், பின் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கும் அலாரம் பொருத்துவதை கட்டாயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
இந்தியாவில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் கார் விபத்தில் உயிரிழப்பதாக உலக வங்கி சென்ற ஆண்டு தெரிவித்தது. 2020-ம் ஆண்டு நிகழ்ந்த கார் விபத்துகளில் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் 15,146 பேர் உயிரிழந்ததாகவும், 39,102 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT