Last Updated : 12 Jul, 2014 10:00 AM

 

Published : 12 Jul 2014 10:00 AM
Last Updated : 12 Jul 2014 10:00 AM

டெல்லியில் போர் நினைவுச் சின்னம்: 50 ஆண்டு கால கனவு நிறைவேறுகிறது

மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் ரூ.100 கோடி செலவில் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என அறிவித்ததன் மூலம் ராணுவ வீரர்களின் 50 ஆண்டு கால கனவு நிறைவேறி இருப்பதாகக் கருதப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் முக்கிய சின்னமாக அமைந்திருப்பது ‘இந்தியா கேட்’ எனும் பிரம்மாண்டமான நுழைவாயில். நாடாளுமன்றத்துக்கு அருகே உள்ள முக்கிய சாலையான ராஜ்பாத்தில் அமைந்துள்ள இது, முதல் உலகப் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக, நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயேர்களால் கட்டப்பட்டது.

வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வருபவர்கள் என அனைவரும் தவறாமல் பார்வையிடும் முக்கியக் கட்டிடமாக இது விளங்குகிறது. சர் எட்வின் லுத்யான்ஸ் என்பவரால் கட்டப்பட்டதற்கு அகில இந்திய போர் நினைவுச் சின்னம் என பெயர் வைக்கப்பட்டாலும் அது, இந்தியா கேட் என்றே அழைக்கப்படுகிறது.

இதன் மீது முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த நம் நாட்டின் வீரர்களின் பெயர்கள் ஆங்காங்கே பொறிக் கப்பட்டுள்ளன. இதனுள் நடுப்பகுதியில் ‘அழியாப் புகழ் உடைய போர் வீரர் ஜோதி’ என்ற பெயரில் 1971-ம் ஆண்டு முதல் ஒரு அணையா ஜோதியும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

எனினும் இதை விரிவுபடுத்தி, உலக அளவில் ஒரு போர் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே 1962-ல் நடந்த போருக்குப் பின் கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்த இந்தக் கோரிக்கை, கடந்த 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு மேலும் வலுப் பெற்றது.

இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, சுமார் 50 வருடங்களாக நிலவி வந்த கோரிக்கையை தற்போது நரேந்திர மோடி அரசு நிறைவேற்ற உள்ளது.

இதுகுறித்து தனது பட்ஜெட் உரையின்போது அறிவித்த ஜேட்லி, ‘‘இதுவரையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உள்ளிட்ட பலர் நம் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவுகூர்வது நமது கடமை என்ற அடிப்படையில் ஒரு போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.

இது, இந்தியா கேட் பகுதியில் அமைக்கப்படுமா அல்லது அதன் அருகில் உள்ள பிரின்ஸ் பூங்காவிலா என ஒரு சிறு குழப்பம் நிலவுகிறது.

எனினும், இது இந்தியா கேட்டில் அமைப்பதற்காகத்தான் கோரிக்கை எழுந்தது என ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வரும் அகில இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சத்பீர் சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘நம் நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் செய்யும் உயிர்த் தியாகங்களுக்கு இன்னும் தேசிய அளவில் முழுமையான ஒரு மரியாதை கிடைக்கவில்லை.

உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இருக்கும் போர் நினைவுச் சின்னத்தை பிரின்ஸ் பார்க் உட்பட வேறு பல இடங்களில் அமைக்கும் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்தோம்’’ என்றார்.

வருங்கால இளைஞர்கள் மத்தியில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபடும் ஆர்வத்தை வளர்க்க இதுபோன்ற சின்னம் அவசியம் எனவும் சத்பீர் தெரிவித்தார். மேலும் அவர், இந்தப் போர் நினைவுச் சின்னத்தின் கட்டிட அமைப்பு, உலகிலேயே சிறந்ததாக அமைக்கப்பட வேண்டும் என ராணுவ வீரர்கள் சமூகம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x