Published : 21 Sep 2022 04:32 AM
Last Updated : 21 Sep 2022 04:32 AM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்த உறுப்பினரும் போட்டியிடலாம். இதற்கு கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. அக்டோபர் 19-ம் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறும்போது, “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை வெற்றி அடையச் செய்வதில் ஒட்டுமொத்த கட்சியும் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு எந்தவொரு உறுப்பினரும் போட்டியிடலாம். ஜனநாயக மற்றும் வெளிப்படையான நடைமுறைப்படி தேர்தல் நடைபெறும். தலைவர் பதவிக்கு போட்டியிட எவருடைய அனுமதியும் குறிப்பாக கட்சித் தலைமையின் அனுமதி தேவையில்லை” என்றார்.
மகாராஷ்டிரா, தமிழகம், பிஹார், காஷ்மீர், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தியை தலைவராக்க கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் ராகுல் காந்தி இதுவரை தனது முடிவை தெளிவுபடுத்தவில்லை.
கெலாட் – சசி தரூர் போட்டி
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட மறுக்கும் பட்சத்தில், அந்தப் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை கொண்டுவர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கேரள எம்.பி.யும் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றம் தேவை என்று வலியுறுத்தியவர் ஆவார்.
வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு டெல்லி திரும்பிய சோனியா காந்தியை சசி தரூர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிடுவதில் தனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை என்று சோனியா கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடுநிலையாக செயல்படுவேன்
இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து சோனியா காந்தி முழு திருப்தி தெரிவித்துள்ளார். தலைவர் பதவிக்கான தேர்தலில் அவர் நடுநிலை வகிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். உட்கட்சி தேர்தல் கட்சியை வலுப்படுத்தும் என அவர் நம்புகிறார்" என்று தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT