Published : 20 Sep 2022 05:10 PM
Last Updated : 20 Sep 2022 05:10 PM
ஆலப்புழா: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத ஒற்றுமை யாத்திரையில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை, தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த யாத்திரை குறித்து ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “3 ஆயிரத்து 570 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த யாத்திரை இதுவரை 275 கிலோ மீட்டரை நிறைவு செய்திருக்கிறது. இந்த யாத்திரையில் பிரியங்கா காந்தியும் கலந்து கொள்வார். கேரள யாத்திரையில் பங்கேற்பதற்கான திட்டமிடல்களை அரவ் மேற்கொண்டு வருகிறார்” என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடத்த திட்டமிட்டிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், “தற்போது ஒட்டுமொத்த கட்சியும் பாரத ஒற்றுயை யாத்திரை வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட சோனியா காந்தியின் ஒப்புதலை சசி தரூர் பெற்றிருப்பதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், “சோனியா காந்தியின் ஒப்புதலோ, ராகுல் காந்தியின் ஒப்புதலோ இதற்குத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT