Published : 20 Sep 2022 04:36 PM
Last Updated : 20 Sep 2022 04:36 PM

“ஆந்திரா, தெலங்கானாவில் பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது” - என்ஐஏ மீது பாப்புலர் ஃப்ரண்ட் விமர்சனம்

வி.பி.நஸ்ருத்தீன் இளமரம்

புதுடெல்லி: "பிஹாரில் செய்ததைப் போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் விசாரணை ஏஜென்சிகளை பயன்படுத்தி நிரபராதிகளை பொய் வழக்குகளில் கைது செய்து பயங்கரவாதக் கதையை உருவாக்குவதன் மூலம் தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்த என்ஐஏ முயற்சிக்கிறது" என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் வி.பி.நஸ்ருத்தீன் இளமரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தற்காப்புக் கலை ஆசிரியர் அநியாயமாக கைது செய்யப்பட்டதற்கும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனையின் பெயரில் நடத்தப்பட்ட அடக்குமுறைக்கும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 2022 செப்டம்பர் 17, அன்று, பாப்புலர் ஃப்ரண்டின் அலுவகங்களில் சோதனை நடத்தி ஆட்சேபனைக்குரிய சில பொருட்களைக் கைப்பற்றியதாகக் கூறுகிறது. இந்தச் சோதனைகள் மாநிலங்களில் உள்ள இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறையின் ஒரு பகுதியாகும். கடந்த ஜூலை மாதத்தில் தெலங்கானா போலீஸார் தற்காப்புக் கலை ஆசிரியரான அப்துல் காதரை விசாரணை என்ற பெயரில் கைது செய்து பின்னர், அவரோடு சேர்த்து இரண்டு அப்பாவி முஸ்லிம்களையும் பொய் வழக்கில் சிக்க வைத்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தூண்டுதலின்படி என்ஐஏவிற்கு இந்த வழக்கு கைமாறிய பிறகு அது பயங்கரவாத வழக்காக மாற்றப்பட்டது. அப்துல் காதர் பல தசாப்தங்களாக தொழில் ரீதியாக தற்காப்பு கலை பயிற்சியாளராக இருந்து வருகிறார். தெலங்கானா மாநிலம் முழுவதிலும் உள்ள தனது மாணவர்களுக்கு தற்காப்பு கலையை கற்பித்துக் கொண்டிருந்தவர். முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் தான் அவர் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளார். விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றியது தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வாக்கு வங்கியை திருப்திப்படுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தும் அரசியல் விளையாட்டைத் தவிர வேறில்லை. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் வகுப்புவாத அணிதிரட்டலின் மறைமுக திட்டங்களுக்கு வழிவகுக்கிறது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த அப்பாவிகளான இயக்கத்தின் உறுப்பினர்களைக் குறிவைக்க என்ஐஏ இந்தப் பொய் வழக்கைப் பயன்படுத்துகிறது. பிஹாரில் செய்ததை போலவே இந்த வழக்கிலும் விசாரணை ஏஜென்சிகளை பயன்படுத்தி நிரபராதிகளை பொய் வழக்குகளில் கைது செய்து பயங்கரவாதக் கதையை உருவாக்குவதன் மூலம் தங்களது அரசியல் எஜமானர்களை திருப்திபடுத்த என்ஐஏ முயற்சிக்கிறது.

ரெய்டு நாடகத்திற்குப் பிறகு என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வழக்கமான குற்றச்சாட்டுகளை தவிர வேறில்லை. உண்மை என்னவென்றால், பிஹார் அல்லது தெலங்கானாவில், சிறு குற்றங்களை நிரூபித்து அதற்கான கைதுகளோ, வெளிப்படையான விசாரணைகளோ நடைபெறவில்லை. என்ஐஏவின் பரபரப்பான மற்றும் ஆதாரமற்ற கூற்றுக்கள் மக்களிடையே பயங்கரவாத சூழலை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சோதனை நாடகம் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களை ஒடுக்கும் கொடூரமான அதிகார துஷ்பிரயோகமாகும். பாப்புலர் ஃப்ரண்ட் இந்த பயமுறுத்தும் தந்திரங்களுக்கு பயந்து கொள்கைகளை வளைக்கவோ சமரசம் செய்துகொள்ளவோ முன்வரும் இயக்கம் அல்ல. நீதிக்கான எங்கள் குரல் தொடரும். நாட்டு மக்கள் முன் இந்த இயக்கம் உண்மையை வெளிக் கொண்டுவரும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x