Published : 20 Sep 2022 12:25 PM
Last Updated : 20 Sep 2022 12:25 PM
பெங்களூரு: செல்வாக்கு மிக்கவர்களின் தலையீடுகள் இருந்தாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தனது அரசு உறுதியாக இருப்பதாகவும், அதில் இரக்கம் காட்டப்போவதில்லை என்றும் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் பொம்மை, "மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி வருகிறது. செல்வாக்கு மிக்க நபர்கள் அதில் தலையிட்டு அரசியல் செய்கின்றனர். ஆனாலும் அரசு, சிறிதும் இரக்கத்திற்கு இடமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இவ்வாறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென்றால் பெங்களூரு மீண்டும் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும்.
அதிகாரிகள் விரைவில், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். ஆக்கிரமிப்புகளில் பல கட்டடத்தின் திட்ட வரைபடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், புதிய மழைநீர் வடிகால் கட்டுமானங்கள் நிலையான வழிகாட்டுதலின் படி கட்டப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநில அரசு சிறப்பு குழு ஒன்று அமைத்துள்ளது" என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே மழைநீர் வடிகால் சீரமைப்பு ரூ.300 கோடி செலவு செய்யப்படும் என்பது உட்பட பெங்களூரு நகரின் மேம்பாட்டிற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதிகாரிகளும் பெங்களூருவில் உள்ள, ஹேப்பல், கோரமங்களா, சலஹட்டா, வ்ருஷபாவதி ஆகிய நான்கு பள்ளத்தாக்குகளில் உள்ள ஏரிகள் மாசுபடுவதைத் தடுப்பதற்கு கூடுதல் கழிவுநீர் சுத்திக்கரிப்பு நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், புருகத் பெங்களூரு மகாநர பலிகே (பிபிஎம்பி), சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் நின்ற பகுதிகளில் தனது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை மீண்டும் தொடங்கியுள்ளது. வார இறுதியை முன்னிட்டு இரண்டு நாட்கள் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக நடந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளில், விப்ரோ வளாகம், சாலார்புரியா, பிரஸ்டீஜ் கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
இந்தநிலையில், விப்ரோ நிறுவனம் தனது பெங்களூரு வளாகத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தானாக முன்வந்து அதிகாரிகளுக்கு உதவி செய்தததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, " பெங்களூருவில் உள்ள ராஜகால்வேயில் 30 - 40 ஐடி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. எந்தவித பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT