Published : 20 Sep 2022 04:51 AM
Last Updated : 20 Sep 2022 04:51 AM
சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ வெளியான விவகாரத்தில் ஒரு மாணவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
பஞ்சாபின் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த தனியார் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விடுதியில் மாணவிகள் குளிப்பதை எம்பிஏ மாணவி ஒருவர் வீடியோ எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார். அவர் சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. வீடியோ எடுத்த எம்பிஏ மாணவி, சிம்லாவை சேர்ந்த அவரது ஆண் நண்பர்கள் சன்னி மேத்தா (23), ரங்கஜ் வர்மா (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் மொகாலி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறும்போது, “சண்டிகர் பல்கலைக்கழக வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு முழுமையாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். தவறிழைத்தவர்கள் தப்ப முடியாது" என்று தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை தடுக்க வரும் 24-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதி மாணவிகள் அனைவரும் வீட்டுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்போனில் மிரட்டல்
இதற்கிடையில், பல்கலை. மாணவிகள் சிலரை கனடாவில் இருந்து மர்ம நபர்கள் செல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் பேசிய மர்ம நபர்கள், மாணவிகளின் குளியல் அறை வீடியோக்கள் தங் களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.
மேலும் மாணவிகளின் தந்தையை தங்களோடு பேசச் சொல்லி மர்ம நபர்கள் உத்தர விட்டுள்ளனர். எனவே சண்டிகர் பல்கலை விவகாரத்தில் சர்வதேச சதி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாணவி வீடியோ எடுத்தது எப்படி?
சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டில் ஏராளமான மாணவிகள் சேர்ந்துள்ளனர். அவர்களை விடுதியில் தங்க வைக்க போதிய கட்டிட வசதி இல்லை. எனவே மாணவர்கள் தங்கும் விடுதியை பல்கலை நிர்வாகம் மாணவிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதி என்பதால் அங்கு போதிய குளியல் அறைகள் இல்லை. எனவே பொதுஇடத்தில் மாணவிகள் குளித்தபோது, சக மாணவி எளிதாக வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வழக்கில் கைதான சன்னி மேத்தா சிம்லாவில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வருகிறார். அவரது நண்பர் ரங்கஜ் வர்மா அங்குள்ள டிராவல் ஏஜென்ஸியில் பணியாற்றி வருகிறார். இருவரும் சேர்ந்தே சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT