Published : 19 Sep 2022 09:36 AM
Last Updated : 19 Sep 2022 09:36 AM
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் கட்சியில் ராகுல் காந்திக்கு முதன்மையான இடமுண்டு என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சியில் அவருக்கு என்றும் முதன்மையான இடம் இருக்கும். அவர் காங்கிரஸ் கட்சியின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். விரைவில் காங்கிரஸ் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இதுவரை தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி இசைவு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் மனதை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் தேர்தலில் நேர்மை, வெளிப்படைத்தன்மைக்கு எந்த குறையும் இல்லை. கட்சியின் மத்திய தேர்தல் குழுத் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி முன்னரே தனது அறிக்கையை வெளியிடிருந்தால் தேவையில்லாமல் சிலர் அது தொடர்பாக விவரம் கேட்டு கடிதம் எழுதியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
பொதுவாகவே எந்த அரசியல் கட்சியும் உட்கட்சித் தேர்தலுக்கு என்று வாக்காளர் பட்டியல் ஏதும் வெளியிடுவது இல்லை. ஆனால் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இவை மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் காணக் கிடைக்கும். அகில இந்திய வாக்காளர்கள் பட்டியல் டெல்லி அலுவலகத்தில் கிடைக்கும்.
பாஜக தனது உட்கட்சித் தேர்தலை நடத்திய போதெல்லாம் எந்த ஒரு ஊடகமும் இவ்வாறாக வெளிப்படைத்தன்மை கேட்டு செய்திகள் வெளியிடவில்லை.
காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய தேர்தலா? அல்லது ஒருமித்த கருத்தா எது சரியான நடைமுறை என்று வினவினீர்கள். தேர்தல் தான் இயல்பான நடைமுறை. எல்லாக் கட்சிகளும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே தலைவரை நிர்ணயிக்கின்றன. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன. அவர் அதை ஏற்பாரா என்று தெரியவில்லை. ஆனால், அவருக்கு கட்சியில் முதன்மையான இடம் இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சேராதோர் தலைமைப் பொறுப்பிற்கு வந்தாலும் கூட அவர்களுக்கான முக்கியத்துவம் குறையப்போவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒற்றுமை யாத்திரை எப்படி? ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கிய ஒற்றுமை யாத்திரை இப்போது 12வது நாளை எட்டியுள்ளது. வழிநெடுகிலும் மக்கள் அவரை வரவேற்கின்றனர். இது யானை விழித்தெழுந்ததற்கான அறிகுறிகள். ராகுல் பாதயாத்திரை செல்லும் வழியெல்லாம் மக்கள் ஒரு புதிய தகவலைப் பெறுகின்றனர். அதாவது இந்த தேசத்தை வெறுப்பால், கோபத்தால், மத மோதல்களால் பிரிவதை அனுமதிக்க முடியாது என்பதே அந்தத் தகவல். மாறாக அன்பும், சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் மக்களை ஒன்றிணைக்கும். அது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். இந்தத் தகவல் நாம் கடந்த 7 ஆண்டுகளாக நம் நாட்டில் கேட்டுவரும் போதனைகளைவிட வித்தியாசமானவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT