Published : 22 Jul 2014 10:00 AM
Last Updated : 22 Jul 2014 10:00 AM
என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று கடும் முடக்குவாதத்தால் பாதிக்கப் பட்ட இமாசலப் பிரதேச பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசுக்கு அவர் இவ்வாறு கோரிக்கை விடுப்பது கடந்த 6 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். இமாச்சலப்பிரதேசம், பாலம் பூரைச் சேர்ந்தவர் 43 வயது சீமா சூத். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் ‘ரிமட்டாய்ட் ஆர்த்தரிடீஸ்’ எனப்படும் கடும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வலியுடனே இவர் தனது பொறியியல் படிப்பை பிலாணியில் உள்ள பி.ஐ.ஐ.டி. நிறுவனத்தில் முடித்தார். வலி நிவாரணி மருந்துகளை இவர் அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில் சீமாவை அவரது குடும்பத்தினரால் பராமரிக்க முடியாமல் போனதால், கடந்த 2008-ல் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு சீமா கடிதம் எழுதினார். இதையடுத்து சீமாவுக்கு மூட்டு மற்றும் இடுப்பு எலும்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இமாசலப்பிரதேச அரசு ஏற்பாடு செய்தது. இதன் பிறகும் சீமாவுக்கு ஆறுதலான நிலை ஏற்படவில்லை.
கருணைக் கொலைக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இந்நிலையில் சீமா தன்னை கருணைக் கொலை செய்ய உத்தர விடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து சீமா கூறும்போது, “6 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளால் எனது தசைகள் சக்தியிழந்து வலி அதிகமாகிவிட்டது. எனது 80 வயது தாயாரால் என்னை கவனித்துக்கொள்ள முடிய வில்லை. என்னால் சம்பாதிக்க முடியாத நிலையில் உறவினர்கள் செய்துவந்த உதவியும் நிற்கத் தொடங்கிவிட்டது. கௌரவமாக வாழமுடியாத நிலையில் வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது” என்றார். தற்போது சீமாவுக்கு அவருடன் பயின்ற மாணவர்கள் உதவி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT