Published : 18 Sep 2022 03:51 AM
Last Updated : 18 Sep 2022 03:51 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளில் 4 முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்றார்.
பிறந்த நாளை முன்னிட்டு, மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் நேற்று காலை 8 சிறுத்தைகளை காட்டில் திறந்துவிட்டார். பிற்பகலில் ஷியோபூரில் நடைபெற்ற மகளிர் சுயஉதவிக் குழு மாநாட்டில் பங்கேற்றார்.
பின்னர் டெல்லி திரும்பிய பிரதமர், விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக சுமார் 40 லட்சம் மாணவர்களுடன் உரையாடினார். நேற்று மாலையில் தேசிய சரக்கு போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்டார்.
பிரதமர் பிறந்த நாளை பாஜக தலைமை 16 நாட்கள் கொண்டாடுகிறது. வரும் அக். 2-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட விழாக்கள் நடத்த பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது புதின் கூறும்போது, “நண்பர் மோடி நாளை பிறந்த நாள் கொண்டாடுகிறார். ரஷ்ய மரபின்படி முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவிக்க மாட்டோம். நட்பு நாடான இந்தியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தலைமையில் இந்தியா செழிக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலன், நீண்ட ஆயுளுடன் வாழப் பிரார்த்திக்கிறேன். பகவான் பசுபதிநாதர் உங்களைப் பாதுகாப்பார்" என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். கடின உழைப்பு, புதுமை சிந்தனைகளால் நாட்டை கட்டியெழுப்பி வரும் உங்களது பணி தொடர வேண்டும். உங்கள் தலைமையில் நாடு மேன்மேலும் முன்னேற வேண்டும். உங்களுக்கு கடவுள் நல்ல உடல் நலனையும், நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன். இந்திய அரசின் பெருந்தன்மைக்காக திபெத் மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.
இதேபோல, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்குர், பாஜக எம்.பி.க்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ட்விட்டரில், “பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தேசிய சரக்கு கொள்கையை பிரதமர் வெளியிட்டார். அவர் பேசும்போது, “சரக்குப் போக்குவரத்து மூலம் 2.2 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் 40 விமானப் போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும். சாலை, கடல் மார்க்கத்தில் விரைவான சரக்குப் போக்குவரத்து உறுதி செய்யப்படும்" என்றார்.
முன்னதாக, 40 லட்சம் மாணவ, மாணவிகளுடன் ஆன்லைன் வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அவர் கூறும்போது, “திறன், மறுதிறன், மேம்பாட்டுத் திறன் ஆகிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். மாறிவரும் காலத்துக்கு ஏற்ப உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டே இருங்கள், புதுமைகளை உருவாக்குங்கள்" என்றார்.
காட்டில் விடப்பட்ட 8 சிறுத்தைகள்
சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நமீபியா நாட்டில் இருந்து 8 ‘சீட்டா’ வகை சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகருக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குனோ-பல்புர் தேசியப் பூங்காவுக்கு அவை கொண்டு செல்லப்பட்டன. பிரதமரின் 72-வது பிறந்த நாளையொட்டி 8 சிறுத்தைகளையும் அவர் நேற்று காட்டில் திறந்துவிட்டார். இவற்றில் 5 பெண் சிறுத்தைகள் அடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT