Published : 17 Sep 2022 02:38 PM
Last Updated : 17 Sep 2022 02:38 PM
புதுடெல்லி: ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்பட போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என நமது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷ்னல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
இதனால், எப்போதும் பிசியாக இருக்கும் அரசு அலுவலங்களில் ஒன்றாக ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. சேவையைப் பெற மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழலும், சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. இவற்றுக்கு முடிவு கட்டும் நோக்கில், போக்குவரத்து தொடர்பான 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கையை சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எடுத்துள்ளது.
இதற்காக, www.parivahan.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இதன்மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், கையொப்பம் மாற்றம், நடத்துநர் உரிமம், வாகனப் பதிவு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் உள்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் முறையில் செலுத்த முடியும்.
ஆதார் எண் உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியத்தை தவிர்க்க முடியும் என்றும், இதன் காரணமாக பொதுமக்களின் நேரம் மிச்சப்படுவதோடு விதிமுறைகளின் சுமையும் குறையும் என்றும் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT