Published : 03 Nov 2016 04:26 PM
Last Updated : 03 Nov 2016 04:26 PM
காஷ்மீரின் லே மாவட்டத்தில் இந்திய-சீனா கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள டெம்சாக் பகுதிக்கு வந்த சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம், அங்கிருந்து திரும்பிச் செல்ல மறுத்ததாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன் கிழமை மதியம் லே மாவட்டத்தின் டெம்சாக் பகுதியின் கட்டுப்பாட்டு எல்லைப்பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன மக்கள் விடுதலை ராணுவம், அங்கிருந்து திரும்பிச் செல்ல மறுத்ததாக இந்திய-திபெத் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.
அதாவது எல்லைப்பகுதியில் சில ‘சிவிலியன்’ பணித்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன, இதற்கு சீனா ஆட்சேபணை தெரிவித்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மனா பகுதியில் தீபாவளிப் பண்டிகையை இந்திய-திபெத் எல்லை போலீஸ் படையினருடன் கொண்டாடியதை அடுத்து இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உயரதிகாரி தெரிவித்தார்.
“சீன ராணுவத்தினர் புதன் மதியம் வந்து இரவு வரை டெம்சாக் பகுதியிலேயே முகாமிட்டிருந்தனர். பிறகு சென்ற அவர்கள் மீண்டும் இன்று காலை வந்துவிட்டனர், நேருக்கு நேர் பார்வை போன்ற ஒரு சூழ்நிலை நிலவுகிறது” என்றார் அந்த அதிகாரி.
2014-க்குப் பிறகு சீன ராணுவம் இந்திய எல்லைப்பகுதியில் டெம்சாக்கில் இவ்வளவு தூரம் உள்ளே வந்துள்ளது. அதாவது, இங்கு நடைபெற்றுவரும் நீர்ப்பாசன திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே சீன ராணுவம் அப்பகுதியில் ஊடுருவியதாக தெரிகிறது.
இது குறித்து லே பகுதி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமியை தொடர்பு கொண்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
குடிநீர் குழாய் அமைக்க சீனா ஆட்சேபணை தெரிவித்ததால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெம்சாக் பகுதி மக்கள் மறுகுடியமர்வுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்தோ-திபெத் எல்லை போலீஸ் சீன ராணுவத்துடன் பேச்சுவார்த்தைக்கு கோரியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை இந்தியாவும் சீனாவும் 4,000 கிமீ எல்லையைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT