Published : 16 Sep 2022 06:03 PM
Last Updated : 16 Sep 2022 06:03 PM
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக இருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் அம்ரிந்தர் சிங், வரும் 19-ம் தேதி பாஜகவில் இணைய இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான அம்ரிந்தர் சிங், இரு முறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர், பாஜகவின் அருண் ஜெட்லியை எதிர்த்துப் போட்டியிட்டு ஒரு லட்சத்து 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். இவரது தலைமையில் 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இதையடுத்து, இவர் முதல்வராக பதவி ஏற்றார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அம்ரிந்தர் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, இவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி நேர்ந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அம்ரிந்தர் சிங், கடந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். நவம்பர் 2-ம் தேதி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 28 தொகுதிகளில் இவரது கட்சி போட்டியிட்டது. எனினும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், லண்டன் சென்று முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அம்ரிந்தர் சிங், சமீபத்தில் நாடு திரும்பினார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அம்ரிந்தர் சிங் சந்தித்தார். அப்போது, பாஜகவில் தான் இணைவது குறித்தும், தனது கட்சியை பாஜகவில் இணைப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா முன்னிலையில் வரும் 19-ம் தேதி அம்ரிந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.
அம்ரிந்தர் சிங்கோடு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் எம்பி, 7 முன்னாள் எம்எல்ஏக்கள் அன்றைய தினம் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கட்சியை இணைக்கும் விழா அடுத்த வாரம் சண்டிகரில் நடைபெறும் என்றும், அப்போது கட்சியின் மற்ற பொறுப்பாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் பிரித்பால் சிங் பாலியாவால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT