Published : 16 Sep 2022 01:31 PM
Last Updated : 16 Sep 2022 01:31 PM

ராகுல் காந்திக்கு வட கிழக்கு பற்றி தெரியவில்லை - அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காண்டு

ராகுல் காந்தி, பேமா காண்டு

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் சீனாவின் ஊடுருவல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு, ராகுல் காந்திக்கு வடகிழக்கு பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி வந்திருந்த பேமா காண்டு அளித்த பேட்டியில்,"இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ள சீனப்படைகள் மீண்டும் தங்களின் கட்டமைப்பு வேலைகளைச் செய்கிறது என்ற தகவலை சமூக வலைதளங்களில் பார்த்தேன். எனக்கு கிடைத்த தகவலின்படி அப்படி எதுவும் நடக்கவில்லை. சீனாவின் அனைத்து நடவடிக்கைகளும் அவர்களின் எல்லைக்குள் தான் நடக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கூற்று முற்றிலும் தவறானது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் ஏதும் இல்லை என்று நான் உறுதியாகச் சொல்வேன்" என்று தெரிவித்திருந்தார்.

பேமா காண்டுவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தீவிரமாக பதிலளித்துள்ளது. அக்கட்சியின் ஊடக ஆய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவின் பொறுப்பாளர் அமிதாப் துபே தனது ட்விட்டர் பக்கத்தில், "புவியியல் நிபுணரான பேமா காண்டு லடாக் இந்தியாவின் வடகிழக்கில் இருப்பதாக நினைக்கிறார்.அந்த அளவிற்கான வடகிழக்கு பற்றிய நிபுணர் அவர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை டேக் செய்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பேமா காண்டுவை, "எம்ஏ என்டையர் பொலிட்டிக்கல் சயின்ஸ்க்கு தகுதியானவர் காண்டு. பாஜகவின் மற்றொரு சிறந்த தயாரிப்பு" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி, புதன்கிழமை (செப்.14) தனது ட்விட்டரில் சீனா ஆக்கிரமிப்பு பற்றி பதிவிட்டிருந்தார் அதில், ஏப்ரல் 2020-க்கு முன்னர் இருந்த நிலவரப்படி எல்லையை வரையறுக்க சீனா ஒப்புக் கொள்ளவில்லை. இந்திய அரசாங்கம், இந்த 1000 சதுர கிலோ மீட்டர் எப்படி மீட்டெடுக்கப்படும் என்று தெரிவித்தால் நலம்" என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x