Published : 16 Sep 2022 09:22 AM
Last Updated : 16 Sep 2022 09:22 AM

லக்னோவில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 9 தொழிலாளர்கள் பலி; இருவர் காயம்

விபத்து நடந்த பகுதி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் தில்குஷா கன்டோன்மென்ட் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 சிறார் உள்பட 9 பேர் பலியாகினர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீ சூர்ய பால், நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவம் குறித்து காவல்துறை இணை ஆணையர் பியுஷ் மோர்டியா கூறுகையில், "தில்குஷா பகுதியில் ராணுவ குடியிருப்பை ஒட்டி சில தொழிலாளர்கள் குடிசை அமைத்து வசித்துவந்தனர். இந்நிலையில் கடுமையான மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து குடிசைகள் மீது விழுந்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஒருவரை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே இருந்து பத்திரமாக மீட்டனர்" என்றார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வரலாறு காணாத மழை: லக்னோவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 155.2 மிமீ மழை பெய்துள்ளது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அங்கு ஒரே நாளில் பெய்துள்ளது. இதுவரை லக்னோவில் 197 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே பருவம் தவறிய மழை பெய்வதும் அதனால் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x