Published : 16 Sep 2022 07:05 AM
Last Updated : 16 Sep 2022 07:05 AM
புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் நிலையான அமைதியை ஏற்படுத்த, 8 தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசு நேற்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அசாம் மாநிலத்தில் தீவிரவாத குழுக்கள் பல இயங்கி வந்தன. இவற்றில் சில கடந்த 2012-ம் ஆண்டு முதல் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் முகாம்களில் தங்கியிருந்தனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தின் 8 தீவிரவாத அமைப்புகளுடன் நேற்று முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் மத்திய அரசு,அசாம் மாநில அரசு மற்றும் 8 தீவிரவாத குழுக்கள் கையெழுத்திட்டன.
ஆதிவாசி தேசிய விடுதலைப் படை, ஆதிவாசி கோப்ரா அசாம் அமைப்பு, பிர்சா கமாண்டோ படை, சந்தல் புலி படை, ஆதிவாசி மக்கள் ராணுவம் ஆகியவை உட்பட 8 தீவிரவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ‘‘அசாம் மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் புதிய சகாப்தம் ஏற்பட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்’’ என்றார்.
தடை செய்யப்பட்ட உல்பா, காமத்பூர் விடுதலை அமைப்பு ஆகியவை தவிர இதர தீவிரவாத அமைப்புகள் மத்திய அரசுடனான இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
பல அமைப்புகள் சரண்
கடந்த ஆகஸ்ட் மாதம் குகி பழங்குடி யூனியன் தீவிரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். கடந்த ஜனவரியில், திவா விடுதலைப் படை மற்றும் ஐக்கிய கூர்க்கா மக்கள் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...