Published : 15 Sep 2022 06:24 AM
Last Updated : 15 Sep 2022 06:24 AM

அத்தியாவசிய மருந்து பட்டியலில் 34 மருந்துகள் சேர்ப்பு: புற்றுநோய்க்கான மருந்து விலை குறைகிறது

புதுடெல்லி: தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி தரும் மாத்திரைகள் உட்பட பல்வேறு விதமான உயிர்காக்கும் மருந்துகளின் விலை குறைக்கப்பட உள்ளது.

தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல் 2022-ஐ (என்எல்இஎம்) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் வெளியிட்டார். ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 376 மருந்துகள் இருந்தன. இதில் புதிதாக 34 மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ரானிடைடின், சுக்ரால்பேட் உள்ளிட்ட 26 மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்போது இந்தப் பட்டியிலில் 384 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும் மருந்துகளின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும்.

அதன்படி, தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மருந்துகளின் பட்டியலில் புற்றுநோயை குணப் படுத்தும் பெண்டமுஸ்டின் ஹைட்ரோகுளோரைடு, இரினோ டெகான் எச்சிஐ ட்ரைஹைட்ரேட், லெனாலிடோமைட் மற்றும் லியூப்ரோலைட் அசிடேட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் அமிக்காசின், முபிரோ சின், மெரோபெனம் மற்றும் ஐவர் மெக்டின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக மருந்துகள் மீதான தேசிய நிலைக்குழு துணைத் தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா தெரிவித்தார்.

கட்டாயம்

என்எல்இஎம் பட்டியலில் சேர்க்கப்பட்ட மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை ஆணையம் (என்பிபிஏ) நிர்ண யிக்கும். அந்த விலையில்தான் கட்டாயம் விற்க வேண்டும்.

எனவே, புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மருந்துகளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து என்பிபிஏ விரைவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பிறகு இந்த மருந்துகளின் விலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசிய மருந்துகள் பட்டியலை வெளியிட்ட பிறகு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: அனைவருக்கும் குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கை எட்ட மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், திருத்தப்பட்ட தேசிய அத்தியாவசிய மருந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தரமான, குறை வான விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய இது முக்கிய பங்கு வகிக்கும். இதன் மூலம் பொதுமக்களின் சுகாதார செலவு கணிசமாகக் குறையும். இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மாறி வரும் பொது சுகாதார முன் னுரிமை மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு என்எல்இஎம் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x