Published : 14 Sep 2022 10:35 AM
Last Updated : 14 Sep 2022 10:35 AM
புதுடெல்லி: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இயங்கும் சைல்ட்லைன் 1098, கடந்த 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் இந்த எண்ணை மத்திய அரசு சிங்கிள் ஹெல்ப்லைன் எண்ணான 112வுடன் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலர் மனோஜ் குமார் கடந்த 12ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு குழந்தைகள் உதவி எண் (1098) ஐ 112 என்ற அனைத்துவிதமான அவசர அழைப்புகளுக்கான எண்ணுடன் இணைக்க இருக்கிறது. 112 இந்தியா செயலியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள், சிடாக் என்ற மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் உதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாநில அளவிலான நோடல் அதிகாரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகளை தேர்வு செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அதுபோல் சிடாக்குக்கு தேவையான உதவிகளை செய்யவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கட்டுப்பாட்டு அறைக்கென் பிரத்யேக கட்டிடம் அல்லது இடம் ஏற்படுத்தித் தருமாறும் வலியுறுத்தியுள்ளது. மிஷன் வட்ஸாலயா என்ற திட்டத்தின் படி 1098 என்ற உதவி எண் 112 என்ற எண்ணுடன் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 911 போல் இந்தியாவில் 112: அமெரிக்காவில் 911 என்ற எண் அவசர காலத்திற்குப் பயன்படுத்தப்படுவதுபோல் இந்தியாஇல் 112 என்ற எண்ணை புழக்கத்துக்கு கொண்டு வர அரசு முயற்சித்து வருகிறது. இப்போது ஆம்புலன்ஸுக்கு 108, போலீஸுக்கு 100, தீயணைப்புக்கு 101, தனித்திருக்கும் பெண்கள் பாதுகாப்புக்கு 1090, குழந்தைகள் பாதுகாப்புக்கு 1098 என்ற எண்கள் இருக்கின்றன. இவற்றை தனித்தனியாக நினைவில் கொள்வதற்குப் பதில் 112 என்ற சிங்கிள் எமர்ஜென்சி எண்ணை அழைத்தால் எல்லா சேவைகளையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.
கவலை தெரிவிக்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள்: ஆனால் 26 ஆண்டுகளாக குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த எண்ணை முடக்கி புதிய எண்ணை அறிவித்த்தால் அது குற்றங்கள், புகார்கள் தெரிவிக்கப்படும் அளவை பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், இவ்வாறாக 112 என்ற எண்ணை குழந்தைகள் அழைத்தால் காவல்துறையினரே இந்த புகார் அழைப்பை ஏற்கும் முதல் நபராகவும் ஆகலாம் இதனாலும் குழந்தைகள் தயங்கி குற்றங்களைத் தெரிவிக்காமல் போகலாம் எனக் கூறுகின்றனர்.
1996ல் டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் திட்டமாக அறிமுகமான சைல்டுலைன் தனியார் ட்ரஸ்ட் மூலம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியுதவிடன் இயங்கியது. 1098 உதவி எண்ணுக்கு இப்போது ஆண்டுக்கு சராசரியாக 80 லட்சம் புகார்களைப் பெறுகிறது. 700 மாவட்டங்களில் இந்த சேவை உள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் சைல்டு லைன் ஹெல்ப் டெஸ்கும் உள்ளது. இந்நிலையில் இதனை அழித்துவிட்டு 112 சேவையை அமல்படுத்தினால் நிச்சயமாக புகார் எண்ணிக்கை குறையும் என்பதே குழந்தைகள் நல ஆர்வலர்களின் கூற்றாக இருக்கிறது.
இது குறித்து ப்ரயாஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தும் முன்னாள் காவல்துறை அதிகாரி அமோத் காந்த் கூறுகையில் "சைல்ட் லைன் 1098 என்பது வெறும் அவசர எண் இல்லை. அது குழந்தைகளுக்கு நிறைய சேவைகளை செய்கிறது. அந்த அமைப்பினை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றுவது மிகவும் சவாலானது. பொருத்தமற்றதும் கூட. 112 அழப்புகள் காவல்துறைக்கே செல்லும். அதை ஏற்கும் காவல்துறையினர் பின்னர் அதனை 1098 க்கு மாற்றுவர். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளின் புகார் அழைப்புகளை ஏற்கும் முதல் நபராக காவல் அதிகாரிகள் இருக்கக் கூடாது. அவர்களால் குழந்தைகளுக்குத் தேவையான கவுன்சிலிங்கை தர இயலாது" என்றார்.
இதனிடையே, மத்திய அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில் 1098 சைல்டுலைன் எண் தொடரும் எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT