Published : 14 Sep 2022 10:25 AM
Last Updated : 14 Sep 2022 10:25 AM
புதுடெல்லி: நான் ஒருபோதும் தனிபட்ட தாக்குதல்களில் ஈடுபட்டதில்லை. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவனாக மோடி அரசின் கொள்கைகளை மட்டுமே விமர்சித்து வந்துள்ளேன் என்ற குலாம் நபி ஆசாத்தின் கருத்திற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சி, பருவநிலை மாற்றம் ஏற்பட்டு குலாம் நபி ஆசாத் தற்போது பாஜகவின் விசுவாசமான சிப்பாயி ஆக மாறியிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியவருமான குலாம் நபி ஆசாத் உள்ளூர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், காங்கிரசில் ஜி-23 உருவாக்கப்பட்ட பின்னர் எங்களை பாஜகவுடன் இணைத்து பேசும் வேலையை ராகுல் செய்தார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முழுநேரம் வேலை செய்யும் தலைவர் ஒருவர் வேண்டும் என்று நாங்கள் கடிதம் எழுதிய போது, அவர்கள் அலறித் துடித்து இந்தக் கடிதம் மோடியின் தூண்டுதலால் தான் எழுதப்பட்டுள்ளது என்ற பொய்யைப் பரப்பினார்கள். அதற்கு நான் காங்கிரஸை வலுப்புடுத்துங்கள் என்று சொல்லும் அளவிற்கு மோடி முட்டாள் இல்லை என்று சொன்னேன்.
யாரும் எனக்கு கட்டளையிட முடியாது. என் மீது எந்த வழக்குகளும் இல்லை. என்னிடம் சொத்துக்கள் இல்லை. பிறகு நான் ஏன் பயப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவனாக நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக அமர்ந்து அவரது அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்திருக்கிறேன். ஒருபோதும் தனிப்பட்ட தாக்குதல்களை செய்ததில்லை. நான் கொள்கைகளை விமர்சித்திருக்கிறேன் தனிப்பட்டவர்களை இல்லை. மோடியுடன் என்னைத் தொடர்பு படுத்தி பேசியவர்கள், நான் குடியரசுத் தலைவராகவோ, குடியரசுத் துணைத் தலைவராகவோ, நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினாரவோ ஆக்கப்படுவேன் என்று கூறினார்கள். அப்படி ஏதாவது நடந்துள்ளதா.
குலாம் நபி ஆசாத்தின் இந்த குற்றச்சாட்டிற்கு காங்ரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த பேட்டியின் சில பகுதிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், " தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் (குலாம் நபி ஆசாத்) பாஜகவினுடை நம்பிக்கைக்குரிய சிப்பாயியாக மாறியிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
கசப்பான அனுபவங்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார். ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்த அவர், "தேசிய கட்சி தொடங்குவதில் எனக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை, ஆனால் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை மனதில் வைத்து, விரைவில் அங்கு ஒரு பிரிவை தொடங்க முடிவு செய்துள்ளேன் என்றும் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT