Published : 14 Sep 2022 04:45 AM
Last Updated : 14 Sep 2022 04:45 AM

பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் காந்தி ஜெயந்தி வரை மக்கள் சேவை விழாவாக கொண்டாட மகாராஷ்டிர மாநில அரசு முடிவு

மும்பை: பிரதமர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழாவாக கொண்டாட மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. அதற்குப்பின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிரதமர் மோடி பிறந்த நாள் முதல் காந்தி ஜெயந்தி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழா கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. மக்களுக்கு சேவையாற்றும்படி அவர் எப்போதும் கூறுவார். அதனால் தேசத் தலைவர் மோடி பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி முதல் தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி வரை 15 நாட்களுக்கு மக்கள் சேவை விழா கொண்டாட முடிவு செய்துள்ளோம். இந்த 15 நாளில் மக்களுக்கு சேவையாற்றப்படும். அரசுத் துறைகளில் நிலுவையில் உள்ள மக்கள் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிர அரசின் அனைத்து துறை இணையதளங்களில், செப்டம்பர் 10-ம் தேதி வரை மக்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அனைத்துக்கும் அக்டோபர் 2-ம் தேதிக்குள் தீர்வு காணப்படவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கையை அக்டோபர் 10-ம் தேதிக்குள் அரசு துறைகள் மாநில அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறையில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், வேளாண் மற்றும் வருவாய் துறையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமரின் கிஷான் சம்மான் திட்டத்தின் உதவி பெறாதவர்களுக்கு தேவையான உதவி, வருவாய் துறையில் நிலுவையில் உள்ள நில ஆவணங்கள், குறைவான வருவாய் பிரிவினருக்கான சான்றிதழ்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறையில் ரேஷன்அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் திருமண சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்கள், சொத்துரிமை மாற்றம், புதிய குடிநீர் குழாய் இணைப்புகேட்டு விண்ணப்பித்தவர்கள் மக்கள் சேவை விழா மூலம் பயனடைவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x