Last Updated : 14 Sep, 2022 04:55 AM

1  

Published : 14 Sep 2022 04:55 AM
Last Updated : 14 Sep 2022 04:55 AM

பெங்களூருவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும் - கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோகா எச்சரிக்கை

பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்.

பெங்களூரு: பெங்களூருவில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் நொய்டாவில் இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டதைப் போல தரைமட்டமாக்க‌ப்படும் என கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெங்களூருவில் கடந்த வாரம் பெய்த கனமழையால் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மகாதேவபுரா, பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, சார்ஜாபுரா ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளிலும், நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்ததால் ரூ.500 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியதே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

மேலும், ஏரி, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக‌ அகற்றுமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் மகாதேவபுரா மண்டலத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கும் பணியில் இறங்கியுள்ள‌னர். நேற்று ஒரே நாளில் மாரத்தஹள்ளி, சின்னப்பனஹள்ளி, பசவனபுரா, ஏஇசிஎஸ் லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும்மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்தனர்.

இதற்கு கட்டிட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாநகராட்சி அதிகாரிகள் பின்வாங்கவில்லை. போலீஸாரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் மழை நீர் எளிதாக‌ வெளியேறும் வகையில் கால்வாய் விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்றது.

இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோகா கூறுகையில், “முதல் கட்டமாக 700 கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை இடிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சில தினங்களுக்கு முன்பு நொய்டாவில் இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டதைப் போல தரைமட்டமாக்கப்படும். இந்த கட்டிடங்களுக்கு அனுமதி அளித்த அதிகாரிகள், நில‌ உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x