Published : 12 Nov 2016 08:54 AM
Last Updated : 12 Nov 2016 08:54 AM
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களிடம் பெறப்படும் பழைய ரூபாய் நோட்டுகளை அரசு என்ன செய்யும் என்பது குறித்து பலருக்கு சந்தேகம் ஏற்படும். இதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளை அணுகியபோது அவர்கள் அளித்த விளக்கம்:
வாபஸ் பெறும் நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் ‘இஷ்க்’ எனப்படும் இடத்தில் பத்திரமாக வைக்கப்படும். பின்னர் இந்த நோட்டுகளில் மறு சுழற்சிக்குப் பயனுள்ள நோட்டுகள், பயன்படாத நோட்டுகள் என ‘கரன்ஸி வெரிபிகேஷன் அண்ட் பிராசஸிங் சிஸ்டம்’ (சிவிபிசி) இயந்திரம் மூலம் தனித்தனியாக பிரிக்கப்படும். பயன்படாத நோட்டுகளை மிகவும் பாதுகாப்பாகவும், வேகமாகவும் பிரிக்கும் இம்முறையை 2003-ல் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலன் அறிமுகப்படுத்தினார். ஒரு சிவிபிசி இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் நோட்டுகளை பிரிக்க முடியும். கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்பதையும் இவை சுலபமாக கண்டறியும் திறன் கொண்டது. மேலும் மறு சுழற்சிக்கு பயன்படாத நோட்டுகளையும் கண்டறிந்து இந்த இயந்திரம் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி தனியாக பிரித்து விடும். அதேபோல் பயன்படும் நோட்டுகள் மறு சுழற்சிக்கு ஏற்றவாறு தயார் செய்து கொடுத்துவிடும்.
உருமாறும் நோட்டுகள்
துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நோட்டுகள் கூழ் போல் செய்யப்பட்டு நூறு கிராம் கொண்ட காகித செங்கல்கள் போல் உருவாக்கப்படுகிறது. அதன்பின்னர் ஏலமுறையில் அரசிடம் இருந்து இந்த காகிதத்தை வாங்கும் வியாபாரிகள் அதில் கோப்புகள், காலண்டர்கள் என பல்வேறு வகையான பொருட்களைத் தயார் செய்து விற்று விடுவர். சிவிபிசி வருவதற்கு முன் செல்லாத நோட்டுகள் துண்டு, துண்டாக கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இதனால் சுற்றுச்சூழலும் பாதித் தது. தற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. கடந்த 1990-ம் ஆண்டு வரை இங்கிலாந்தில் கூட செல்லாத நோட்டுகள் கத்தரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தற்போது இவை அங்கு விவசாயத்திற்கு உபயோகப் படும் வகையில் உரமாக தயாரிக் கப்படுகிறது. அமெரிக்காவில் செல்லாத, பழைய டாலர்கள் கத்தரிக்கப்பட்டு அவை கலை வடிவப் பொருட்களாக உருமாற்றப் படுகிறது.
இவ்வாறு அவர்கள் விளக்கம் அளித்தனர்.
கடந்த மார்ச் 31-ம் தேதி வரையிலான கணக்குப்படி, வங்கிகள் மூலமாக மக்களிடம் ரூ.9,026.6 கோடி சுழற்சியில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரி வித்துள்ளது. இதில் ரூ.2,203 கோடி 500, 1000 ரூபாய் நோட்டுகளாகும். இந்த நோட்டுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு அழிக்கப்பட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT