Published : 13 Nov 2016 11:21 AM
Last Updated : 13 Nov 2016 11:21 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்குக் கிடைத்த வெற்றியானது, ‘உலகம் முழுக்க வலதுசாரிகள்தான் வெற்றி பெறுகிறார் கள்’ என்பதையே மேலும் உறுதிப்படுத்துகிறது என்று ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள். வலதுசாரிகள், இடதுசாரிகளைத் தோற்கடிப்பதுடன் முற்போக்கான சுதந்திரக் கருத்துகளையும் தூக்கி வீசி ஆட்சிக்கு வருகிறார்கள் என்கிறார்கள். அமெரிக்காவில் சுதந்திரச் சந்தை, வர்த்தகம், வெளிநாட்ட வர்கள் குடியேற்றம் ஆகியவற்றை மக்கள் ஏற்கவில்லை. ஐரோப்பியர்கள் தேசிய உணர்வு குன்றுவதை விரும்பவில்லை. இந்தியாவில் மதம் என்பது தனிப்பட்ட விஷயம் என்ற நிலைப்பாடு ஏற்கப்படவில்லை. தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு எல்லா தலைவர்களுமே அந்தந்த குழுக்களுக்கு ஏற்ப, ‘நான் உங்களில் ஒருவன்’ என்று பேசிவிடுகின்றனர். இப்படிப்பட்ட மாறுதல்களைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.
இந்தியா, பிரிட்டன் (பிரெக்ஸிட்), ஆர்ஜென் டினா, பிரேசில் நாடுகளில் வலதுசாரி ஆதரவுப் போக்கு உறுதியாகிவிட்டது. இத்தாலி, பிரான்ஸ் ஏன், வெனிசுலாவில்கூட இது தொடரக்கூடும். சாவேஸுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் 4 இலக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியா மல் போராடிக் கொண்டிருக்கிறார். ருசிர் சர்மா தன்னுடைய ‘தி ரைஸ் அண்ட் பால் ஆப் நேஷன்ஸ்’ என்ற சமீபத்திய புத்தகத்தில், தென்னமெரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பொதுமக்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவு அளித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். கொலம்பியாவில் கொரில்லாக்களுடன் அரசு சமரச ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கருத்தறியும் வாக்கெடுப் பில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். ஜப்பானில் பிரதமர் அபேயின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. துருக்கியின் அதிபர் எர்டோகனின் செல்வாக்கும் உச்சத்தை தொட்டு வருகிறது.
வலதுசாரிகளின் எழுச்சி பழைய இடதுசாரி களை மட்டுமல்ல மையநிலை வலதுசாரிகளை யும் கூட அடித்து விலக்கியிருக்கிறது என்கிறார் கள். இது உண்மையென்றால் கனடா நாட்டில் எப்படி இடதுசாரியான ஜஸ்டின் ட்ரூடு வென்றார், இடதுசாரி என்று கருதப்படும் துதார்தே பிலிப்பைன்ஸில் எப்படி மேலே வந்தார். தென் கொரியாவிலும் வலதுசாரி ஆட்சிக்கு எதிரான எழுச்சியே வலுவாக இருக்கிறது.
இந்தியாவில் எப்படி?
இந்தியாவில் 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு நிலைமை என்ன? மகாராஷ்டிரா, ஹரியாணா, ஜார்க்கண்டில் வலதுசாரி வெற்றி நீடித்தது. என்றாலும் டெல்லி, பிஹார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் என்ன ஆயிற்று? டெல்லியிலும் பிஹாரிலும் பாஜக படுதோல்வி அடைந்தது. மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றது. எனவே வலதுசாரிகள்தான் வெற்றி பெறுகிறார்கள் என்ற கருத்து சரியல்ல என்று புரிகிறது.
நம்மையெல்லாம் இந்த முடிவுகள் குழப்புகின்றன. ஆட்சியில் இருப்பவர்கள் மீதான அதிருப்தியால் மாற்று அணியை வாக்காளர்கள் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. அது உண்மை என்றால் இடதுசாரிகள் வலுவடை யாத சமயத்தில் பிரிட்டனிலும் கொலம்பியாவிலும் வலதுசாரி அரசுகள் நடத்திய கருத்தறியும் வாக்கெடுப்புகளில் அவற்றுக்குத் தோல்வி ஏற்பட் டது ஏன்? வலதுசாரிகள் வளர்ந்து வருகிறார்கள் என்பது உண்மையானால் டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி வென்றது எப்படி? அதே போல பஞ்சாப், கோவா, குஜராத்திலும் கூட செல்வாக்கு பெறுவது எப்படி?
எனவே சித்தாந்த அணுகுமுறைகளுக்கு அப்பால் இவற்றுக்கான விடையைக் காண நமக்கு ஆர்வம் ஏற்படுகிறது. முதலாவதாக, வாக்காளர்கள் விரும்புவது ஆட்சியில் இருக்கும் அரசை மாற்றுவது மட்டுமல்ல; ஏற்கெனவே உருவாகியுள்ள சிந்தனைகள், லட்சியங்கள், சிந்தனைப் போக்குகள் மாற வேண்டும் என்றும் விரும்புகின்றனர். தேர்தல் அறிக்கையில் முழுமையான மாற்றத்தை 3 காரணங்களுக்காக வாக்காளர் விரும்புகிறார். புதிதாகக் கூறப்படுவதை ஏற்கவும் அதற்காக சில இடர்களைச் சந்திக்கவும் வாக்காளர்கள் தயாராக இருக்கின்றனர். கால் நூற்றாண்டாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உலகமயமாதல் போன் றவை காரணமாக சிற்றூர்களிலும் கிராமங் களிலும் வசிப்பவர்கள் கூட வளம் கொழிக்கும் நகரங்களுக்கு இடம் பெயர்வதை மட்டுமல்ல, அந்த வளம் தங்கள் ஊருக்கும் வர வேண்டும் என்று நினைக்கின்றனர். மூன்றாவதாக, பழைய பாணி வாக்குறுதிகளும் பிரச்சாரங்களும் அவர் களுக்கு அலுத்துவிட்டன. புதிய தலைவர்கள், புதிய கட்சிகள், புதிய அணுகுமுறைகளை வரவேற்கின்றனர்.
தேசியவாதம்தான் இவற்றில் மேலோங்கி நிற்கிறது. ஐரோப்பிய கால்பந்து விளை யாட்டின்போது ரசிகர்களின் விசுவாசம், தேசிய அணியைவிட தாங்கள் விரும்பும் தனி அணி மீது தான் இருந்தது. வலது, இடது சிந்தனாவாதிகளில் மிதமான போக்கு உள்ளவர்கள் இந்தத் தேசிய உணர்வு மங்குவதை வரவேற்கின்றனர். மதமும் தேசியமும் மனித குலத்தின் பழமையான உணர்வுகள். பழைய நினைவுகள் அவற்றை மீண்டும் உயிர்ப்பித்துவிடும். ட்ரம்ப் போன்ற புத்திசாலியான தலைவர்கள் இதை நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
2014 மக்களவை பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, “இந்தத் தேர்தல் முடிவு உனக்கு நான் கட்டுப்பட்டவன் அல்ல என்ற தலைமுறையின் தீர்ப்பு” என்று எழுதியிருந்தேன். இதை தர்க்கரீதியாக நல்லதொரு கேள்வி மூலம் மடக்கினர். முதல் முறையாக ஒரு வலதுசாரி கட்சி, பெரும்பான்மை வலுவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறதே என்று கேட்டனர். சித்தாந்த மாறுதல்களுக்காக இந்தியா வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் சுயநலம், எந்நாளும் வறுமைக்கு ஆதரவு காட்டும் போக்கு, அதிகாரத்தைத் தாங்களும் நேரடியாக ஏற்காமல் தங்களால் நியமிக்கப்பட்டவரையும் ஆளவிடாமல் தடுக்கும் போக்குக்கு எதிரானதே அத்தீர்ப்பு.
பசுக்களைக் கொல்லக்கூடாது என்று முரட்டுத் தனம் காட்டும் படைகளுக்கு ஆதரவாகவோ, பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பதில் தாக்குதல் தொடுக்காத பொறுமையைக் கைவிட வேண்டும் என்றோ, முத்தலாக் கூடாது என்றோ அப்போது யாரும் வாக்களித்துவிடவில்லை. இதற்கான சான்று இப்போது உலக அளவிலான தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கிறது.
புதிய இளம் வாக்காளர்கள் எதிர்காலத்தை வளப்படுத்தும் கட்சிகளையே நாடுகின்றனர். உலகமயமாதல், வளர்ச்சி காரணமாக தகுதியில் லாதவர்களுக்கும் தவறானவர்களுக்கும் - அதிலும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வந்த குடியேறிகளுக்கு - பலன்கள் கிடைப்பதாக மூத்த தலைமுறை கோபப்படுகிறது. இவ்விரு சூழல்களிலும் விளைவு ஒன்றுதான்; பழைய அரசைத் தூக்கி எறிய வேண்டும் என்ற ஆவேசம் ஏற்படுகிறது. அதனால்தான் மோடி இதுவரை யாரும் செய்திராதபடி ஆட்சி செய்கிறார். கேஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியை ஒட்டத் துடைத்துக் கொண்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைக் காட்டிலும் தான் சார்ந்த குடியரசுக் கட்சியையே மண்ணைக் கவ்வ வைத்துவிட்டார் ட்ரம்ப் என்று அமெரிக்க வாக்காளர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர்,
இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT