Published : 13 Sep 2022 04:34 PM
Last Updated : 13 Sep 2022 04:34 PM
புதுடெல்லி: இந்தியச் சிறைகளில் உள்ள தடுப்புக் காவல் கைதிகளின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. இது, நாட்டிலுள்ள மொத்த முஸ்லிம் மக்கள்தொகையான 14.2 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிக விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தரவுகள், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள சிறைச்சாலைகளில், குற்றவாளிகள் (ஒரு குற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டு குற்றாவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள்), விசாரணைக் கைதிகள் (நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளின் கைதிகள்) தடுப்புக் காவல் கைதிகள் (விசாரணையின்றி சட்டரீதியாக காவலில் கைதாகி இருப்பவர்கள்) மற்றும் இந்த மூன்று பிரிவுகளிலும் சேராத பிறக் கைதிகள் என நான்கு வகையான கைதிகள் உள்ளனர். இதில் நான்காவது வகையினர் மிகவும் குறைவாக இருப்பர்.
குறிப்பாக, அசாமில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் 61 சதவீதத்தினரும், விசாரணைக் கைதிகளில் 41 சதவீதத்தினரும் முஸ்லிம்கள். அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 34 சதவீதமே. ஒப்பீட்டு அளவில் மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையை விட, சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் அதிகமாக உள்ளது.
முஸ்லிம்களின் எண்ணிக்கை: கீழ்கண்ட அட்டவணை, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம் மக்கள் தொகையினையும், 2021-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியச் சிறைகளில் உள்ள குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவலில் உள்ளவர்களில் முஸ்லிம்களின் சதவீதங்களைக் காட்டுகிறது. இதில் நீலம் குற்றாவாளிகளின் சதவீதம், மஞ்சள் விசாரணைக் கைதிகள், பச்சை என்பது தடுப்புக் காவலில் உள்ளவர்களின் சதவீதங்களை காட்டுகிறது.
இந்துக்களின் எண்ணிக்கை: கீழே உள்ள அட்டவணை இந்தியாவின் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்துக்களின் மொத்த மக்கள் தொகையினையும், 2021-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியச் சிறைகளில் குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவலில் உள்ளவர்களில் இந்துக்களின் சதவீத்தை காட்டுகிறது. இதில் நீலம் குற்றவாளிகள், மஞ்சள் விசாரணைக் கைதிகள், பச்சை தடுப்புக் காவலில் உள்ளவர்களின் சதவீதங்களைக் குறிக்கிறது.
மாநில வாரியாக முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை: கீழ்கண்ட அட்டவணையில் 2011-ம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையில் முஸ்லிம்களின் சதவீதத்தையும் (கருப்பு புள்ளிகள்), 2021-ம் ஆண்டு நிலவரப்படி சிறைகளில் உள்ள முஸ்லிம் குற்றாவளிகளின் (மஞ்சள் புள்ளிகள்) சதவீதம், விசாரணைக் கைதிகளின் (பிங்க்) சதவீதம், தடுப்புக் காவலில் உள்ளவர்களின் (நீலம்) சதவீதத்தையும் காட்டப்பட்டுள்ளது. இதில், பல மாநிலங்களில் தடுப்புக் காவலில் உள்ள முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள போதிலும், மொத்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையில் (அடைப்புக்குறிக்குள் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது) சில மாநிலங்களிலேயே மிக அதிகமாக உள்ளது. எனவே, முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை மொத்தக் கைதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட வேண்டும். (விரிவான அட்டவணை இங்கே)
தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் ஜம்மு - காஷ்மீர், உத்தரப் பிரதேசம், குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலேயே அதிகமாக உள்ளது. இவற்றில் குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
மகராஷ்டிரா மாநிலத்தில் கைதிகள், விசாரணைக் கைதிகள் மதரீதியாக பிரிக்கப்படவில்லை. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் மக்கள்தொகை பிரிவுகள் கிடைக்காததால் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை ..
தகவல் உறுதுணை: தி இந்து ஆங்கில நாளிதழ். விக்னேஷ் ராதாகிருஷ்ணன், ஜாஸ்மின் நிகாலனி ஆகியோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT