Published : 13 Sep 2022 02:56 PM
Last Updated : 13 Sep 2022 02:56 PM
புதுடெல்லி: கோவிட்-19 தொற்றின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக் குழு சுகாதாரம் குறித்த தனது 137-வது அறிக்கையை மாநிலங்களவையில் திங்கள்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘கோவிட் தொற்று பாதிப்பின் அதிகரிப்பு சுகாதார கட்டமைப்பின் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பல கோவிட் நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தது, சிலிண்டர் வேண்டி கொஞ்சியது, மருத்துவமனைகளில் குறைவான நேரத்திற்கே ஆக்ஸிஜன் சப்ளை கையிருப்பு இருந்தது போன்ற பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
நிலைக்குழு தனது 123-வது அறிக்கையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படலாம் என அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்குவதில் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்று 2020-ல் சுகாதார அமைச்சகம் வழங்கிய உறுதி மொழி குறித்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அது வெற்று உறுதி மொழி என்பது கோவிட் 19ன் இரண்டாவது அலையின்போது அப்பட்டமாக வெளிப்பட்டது.
மாநிலங்களுக்கிடையே ஆக்ஸிஜன் வழங்கலை நிர்வகிப்பதில் அரசு தோற்றுவிட்ட அதேவேளையில், வானளாவிய ஆக்ஸிஜன் தேவை இந்தபோது, அதன் விநியோத்தை சீர்படுத்தாதது எதிர்பாராத மருத்துவச் சிக்கலுக்கு வழிவகுத்தது.
மருத்துவத் தளவாடங்களின் மோசமான மேலாண்மை, சிக்கல்களுக்கு சுகாதார அமைப்பு விரைவாக பதில் அளிக்காதது போன்றவை இரண்டாம் அலையின்போது அரசாங்கத்தின் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஆக்ஸிஜன் விநியோகம், அதன் உற்பத்தி, ஆக்ஸிஜனுடன் இணைந்த படுக்கைகள், வெண்டிலேட்டர்களின் தேவைகளை பற்றிய மோசமான கண்காணிப்பு அப்போதைய சூழலை மேலும் மோசமாக்கியது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட கோவிட் மரணங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை கேட்டபோது, 20 மாநிலங்கள் அளித்த பதிலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த மரணங்களும் நிகழவில்லை என்று கூறியிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட் மரணங்கள் நிகழவில்லை என்று கூறியிருப்பது நிலைக்குழுவை கலக்கமடையச் செய்துள்ளது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன என ஊடகங்களில் வெளியான செய்திகள் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அரசாங்கம் உண்மையை அலட்சியம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து ஆக்லிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கணக்கிட வேண்டும் என்றும், கோவிட் மரணங்கள் குறித்த ஆவணங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT