Published : 12 Sep 2022 06:30 PM
Last Updated : 12 Sep 2022 06:30 PM
புதுடெல்லி: உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டின்போது, சீன அதிபரையும், பாகிஸ்தான் பிரதமரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது மாநாடு உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சமர்கண்ட் செல்ல இருக்கிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோரும் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற மாநாடுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் முறையில் நடைபெற்றன. இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்க உள்ளனர்.
கடந்த 2020-ல் லடாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பு உறவில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக லடாக் எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்தன. போர் பதற்றமும் உருவானது. எனினும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, அங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கிழக்கு லடாக்கின் முக்கிய முனைகளில் ஒன்றான கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இரு நாட்டு ராணுவமும் படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த 8ம் தேதி முதல் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கியது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல், பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் ஆகியோருடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் தூதர் மணிஷ் பிரபாத், மாநாட்டின் இடையே சில நாடுகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகக் கூறினார். எந்தெந்த நாடுகளுடன் இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை என அவர் தெரிவித்தார். முடிவான உடன் அது குறித்து அறிவிக்கப்படும் என்றும் மணிஷ் பிரபாத் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT