Published : 12 Sep 2022 01:11 PM
Last Updated : 12 Sep 2022 01:11 PM

சோனியா காந்தியுடன் விரைவில் நிதிஷ், லாலு சந்திப்பு- தேஜஸ்வி யாதவ் தகவல்

லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் | கோப்புப் படம்

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணிக் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் விரைவில் சோனியா காந்தியை சந்திப்பார்கள் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "நாம் ஒவ்வொரு எதிர்க்கட்சியினரையும் ஒன்றிணைக்க வேண்டும். சோனியா காந்தி இந்தியா திரும்பி வந்ததும் ஒரு சந்திப்பு இருக்கும். அவரை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக சென்று சந்திப்பார்கள். நாங்கள் அனைத்து எதிர்gகட்சியினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்" என்றார். பிஹார் முதல்வர் நிதிஷ் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க டெல்லி சென்று திரும்பிய நிலையில், தேஜஸ்வி யாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக நிதிஷ் குமார் கடந்த வாரத்தில் டெல்லி சென்றிருந்தார். அப்போது, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், என்எல்டி தலைவர் ஓபி சவுதாலா, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். மருத்துவ சிகிச்சைக்காக சோனியா காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் அவரைச் சந்திக்கவில்லை.

நிதிஷ் குமார் தனது டெல்லி பயணத்தின் போது நாட்டின் நலனிற்காக பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஒரு அணியை உருவாக்குவதே அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு என்று தெரிவித்திருந்தார்.

பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா என அவரிடம் கேட்டபோது, " ஒரு அணி உருவாக்கப்பட்டால் அது முதல் அணியாகதான் இருக்கும் மூன்றாவது அணியாக இருக்காது. நாட்டின் நலனுக்காக காங்கிரஸ், சோசலிச பின்னணி கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் பிறக்கட்சிகளுக்கிடையே ஒரு கருத்தொற்றுமை உருவாக வேண்டும். பாஜக ஆளாத பிறமாநிலங்களில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால் ஒரு நல்ல சூழல் உருவாகும்" என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x