Published : 12 Sep 2022 11:00 AM
Last Updated : 12 Sep 2022 11:00 AM

வட இந்தியாவில் 'கேங்ஸ்டர்' வேட்டை: 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

பிரதிநிதித்துவ படம்

புதுடெல்லி: வட இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் அதனை ஒட்டிய மாநிலங்களில் உள்ளூர் போலீஸார் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எதற்காக இந்த சோதனை? பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் உள்ளூர் கேங்க்ஸ்டர் கும்பலான லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலுக்கும், கோல்டி ப்ரார் கும்பலுக்கும் இடையே நிலவிய போட்டிதான் காரணம் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் சித்து மூஸ் வாலா கொலைக்குப் பின்னர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தன. அதுவும் குறிப்பாக தீவிரவாத கும்பலுடன் உள்ளூர் கேங்ஸ்டர்கள் ரகசிய உறவு அம்பலமானது எனக் கூறுகிறது என்ஐஏ வட்டாரம்.

சமீப நாட்களாக கும்பல் வன்முறையாளர்கள், உள்ளூர் ரவுடிகள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொள்வது அதிகமாகியுள்ளதாகவும் என்ஐஏ கூறுகின்றது. இந்நிலையில், கேங்ஸ்டர் தீவிரவாத கும்பல் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக பஞ்சாப் போலீஸாருக்கு எச்சரித்து வருவதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று வட இந்தியாவில் ஒரே நாளில் 50 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

பஞ்சாபில் கடந்த மார்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அம்மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மான் இருக்கிறார். கடந்த ஜூன் 29ஆம் தேதி பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் கூட. இந்நிலையில், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x