Published : 12 Sep 2022 05:16 AM
Last Updated : 12 Sep 2022 05:16 AM

பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் செப்.17-ம் தேதி முதல் ஏலம்

பிரதமர் மோடி.

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட 1,2000-க்கும் மேற்பட்ட பொருட்கள், செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன.

பிரதமருக்கு பரிசாக கிடைக்கும் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதி மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

கடந்தாண்டு பிரதமர் மோடிக்கு கிடைத்த 1,348 பரிசு பொருட்கள் pmmementos.gov.in என்ற இணையதளம் மூலம் ஏலம் விடப்பட்டது. இவற்றுக்கு 8,600-க்கும் மேற்பட்ட ஏலங்கள் கேட்கப்பட்டன. ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தான் கையெழுத்திட்டு பிரதமருக்கு பரிசாக அளித்த ஈட்டி அதிகபட்சமாக ரூ.1.5 கோடிக்கு ஏலம் போனது. இந்திய கிரிக்கெட் வாரியம், கிரீன்கோ, ஜேஎஸ்டபிள்யூ குரூப், மற்றும் சோலார் இன்ட்ஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநதிகள், ஆன்லைன் ஏலத்தில் அதிக மதிப்பு மிக்க 20 பொருட்களை ஏலம் எடுத்தனர். இதன் மூலம் திரட்டப்பட்ட தொகை நவாமி கங்கை திட்டத்துக்கு கொடுக்கப்பட்டது.

அதேபோல் தற்போதும் பிரதமருக்கு வந்த பரிசு பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராணி கமலாபதி சிலையை பரிசளித்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமன் சிலையை பரிசாக அளித்துள்ளார். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் திரிசூலம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வெங்கடாஜலபதி படத்தை பரிசாக அளித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள், விளையாட்டு பொருட்கள் பலவற்றை பிரதமருக்கு பரிசாக அளித்தனர். கரோனா பாதிப்பு குறித்த ஓவியங்கள் பலவற்றை மதுபானி கலைஞர்கள் அளித்துள்ளனர். இதுபோல் பிரதமருக்கு பலர் அளித்த சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படவுள்ளன. pmmementos.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை இந்த பொருட்கள் ஏலம் விடப்படும். இந்த முறை ஏலத்தில், கர்நாடகாவிலிருந்து பிரதமருக்கு பரிசாக அளிக்கப்பட்ட விநாயகர் படத்தின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x