Published : 12 Sep 2022 09:04 AM
Last Updated : 12 Sep 2022 09:04 AM

நாட்டிலேயே முதல்முறையாக காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம் நியமன எம்.பி.யாக அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம் ஒருவரை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீரின் மலைப்பகுதியில் வசிக்கும் குர்ஜார் பிரிவு மக்கள் தொகை 14.93 லட்சமாக இருந்தது. குர்ஜார், பகர்வால்ஸ் பிரிவினரில் 99.3 சதவீதம் பேர் இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர்.

காஷ்மீரின் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடியினராக குர்ஜார் மக்கள் உள்ளனர். ஆனால், காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து ரத்து செய்யப்படு வதற்கு முன்பு வரை குர்ஜார் பிரிவினருக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் போதிய அளவில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிவிக்கையில், “இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், காலியாக உள்ளமாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு குலாம் அலியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் தேர்தல்

இதன் மூலம் குர்ஜார் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்க உள்ளார். காஷ்மீரில் பேரவைத் தேர்தல் விரைவில் நடை பெறவுள்ள நிலையில் இந்த நியமனம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x